மக்கள்தொகையை அதிகரிக்கும் நோக்கில் சீன அரசு, அந்நாட்டு இளைஞர்களை விந்தணு தானம் செய்யச் சொல்லி வலியுறுத்தி உள்ளது.
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. இருந்தபோதிலும், அங்கு கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், சமீபகாலமாக அந்நாடு கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதுடன், லட்சக்கணக்கான மக்களை இழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி நிலவரப்படி, சீனாவில் ஒருநாளைக்கு சுமார் 11 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக உலகளாவிய சுகாதார நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான Airfinity Ltd தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால், சீனாவை பொறுத்தவரை 61 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் தொகையில் பெரும் சரிவு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான், அந்நாட்டு அரசு மக்கள்தொகை பெருக்கத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. ஒருகாலத்தில் இந்த மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த தம்பதியர் ஒருவர், ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்த அதே சீன அரசு தற்போது, ஒரு தம்பதியர் 3 குழந்தைகளைப் பெற்றும் கொள்ளமளவுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மேலும், சீன இளைஞர்கள் திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தது. இப்படி, பல்வேறு கவர்ச்சிகர திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் மக்கள்தொகை அதிகரிக்கவில்லை.
இதையடுத்து, தற்போது விந்தணு தானம் செய்யச் சொல்லி இளைஞர்களை அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. ஒரு தம்பதிக்கு அல்லது மருத்துவமனைக்கு, குழந்தை பெற்றுக் கொள்வதற்காக, தனது விந்தணுவை தானம் செய்வதே விந்தணு தானம் ஆகும். இதைத்தான் அந்த நாட்டு இளைஞர்களிடம் சீன அரசு வழங்கச் சொல்லி வலுயுறுத்தி வருகிறது. அதிலும், ஆரோக்கியமான எவ்வித மரபணு நோய் பாதிப்புகளும் இல்லாத 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு விந்தணு தானம் செய்ய வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விந்தணு தானம் செய்ய முன்வருபவர்களுக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும் எனவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, அந்நாட்டில் இளைஞர்கள் பலரும் திருமணத்தைத் தள்ளிப் போடுவதாலும், கருவுறுதல் விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதாலும் குழந்தையின்மை அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தற்போது விந்தணு தானம் செய்ய முன்வருமாறு கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. அதிலும், சீன இளைஞர்களிடையே கடந்த 15 ஆண்டுகளில் விந்து தரம் குறைந்துவிட்ட நிலையில், விந்தணு தானம் செய்வதற்கு உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாவும் தயாராக இருப்பவர்களை வலை வீசி தேடி வருகின்றன விந்தணு வங்கிகள்.
குறிப்பாக, ஷான்சி, யுனான், ஷான்டாங், ஜியான்சி, ஹைனான் உள்ளிட்ட பல்வேறு மாகணங்களில் உள்ள விந்தணு வங்கிகள் அடுத்தடுத்து இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதற்காக, தானமாக பெறப்படும் விந்தணுக்களை சேமித்து வைக்கவும் தேவையான ஏற்பாடுகளை விந்தணு வங்கிகள் செய்துவருகின்றன. விந்தணுவை தானமாய் கொடுப்பவர்கள் மிகமிக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது அவசியம். இதைவைத்துத்தான் இளைஞர்களைக் குறிவைத்துள்ளது சீன அரசு. அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயது இளைஞரான கைலே கோர்டி, உலகம் முழுவதும் இதுவரை 71 நபர்களுக்கு விந்தணு தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்