அப்துல் ரஹீம் ட்விட்டர்
உலகம்

The real kerala story| சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை மீட்க 34 கோடி நிதி திரட்டிய மக்கள்

சவூதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோழிக்கோட்டைச் சேர்ந்த இந்தியர் ஒருவரை விடுவிப்பதற்காக ரூ.34 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.

Prakash J

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு ஹவுஸ் டிரைவர் விசாவில் சவூதி அரேபியா சென்றார். அங்கே ஒரு வீட்டில் வாகனம் ஓட்டும் பணியுடன், அந்த வீட்டு முதலாளியின் மாற்றுத்திறனாளி சிறுவனைப் பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில், 2006 ஆம் ஆண்டு அப்துல் கவனித்துக் கொண்டிருந்த மாற்றுத் திறனாளி சிறுவனின் மரணத்திற்கு அவர் காரணமானதால் அப்துல் ரஹீம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சவூதி அரேபியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் ரஹீமுக்கு பொதுமன்னிப்பு வழங்க மறுத்ததால் கடந்த 2018-ஆம் ஆண்டு அப்துல் ரஹீமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், சிறுவனுக்கு இழப்பீடாக ரூ.34 கோடி ரூபாயை ரஹீம் குடும்பத்தினர் வழங்கினால் அவர் மன்னிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் நன்கொடைகள் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு வரும் ஏப்ரல் 18ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே ரூ.34 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டு உள்ளது.

இதற்காக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஓர் செயலி (SAVEABDULRAHIM) உருவாக்கப்பட்டு அதன்மூலம் நிதி திரட்டப்பட்டது. இதற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர். தற்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரூ.34 கோடிக்கும் கூடுதலாகவே நிதி வந்தடைந்துள்ளது. காலக்கெடுவுக்கான நாட்கள் கொஞ்ச காலமே இருந்தபோதுதான் நிதி குவியத் தொடங்கியது என அந்த நிதியமைப்பில் இருந்த ஓர் உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, 18 ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல் ரஹீம் தாயகம் திரும்ப உள்ள நிலையில், உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்!

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது ஒரு உண்மையான கேரளக் கதை. இதன்மூலம் வகுப்புவாதத்தால் உடைக்க முடியாத சகோதரத்துவக் கோட்டை கேரளா என்பது உறுதியாகி உள்ளது. உலகத்தின்முன் கேரளாவை பெருமைப்படுத்திய இந்த நோக்கத்திற்காக அனைத்து நல் உள்ளங்களையும் நாங்கள் மனதார பாராட்டுகிறோம். வெளிநாடுவாழ் மலையாளிகளின் பங்கு, இந்த முயற்சியின் பின்னணியில் இருப்பது பாராட்டுக்குரியது. இந்த ஒற்றுமைக்காக நாம் ஒருமனதாக முன்னோக்கிச் செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு (2023) மே மாதம் `தி கேரளா ஸ்டோரி' என்ற படம் ரிலீஸானது. கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்து, அவர்களை நாடுகடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருந்ததால் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. ”இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை உமிழும் `தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை வெளியிடக் கூடாது" என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இன்றுவரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

The Kerala Story

ஆனால், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இப்படத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் தற்போதும் ஆங்காங்கே திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், அப்துல் ரஹீமுக்கு பலரும் செய்திருக்கும் உதவியை கேரள முதல்வர் உதாரணமாகக் காட்டி, இதுதான் உண்மையா கேரள ஸ்டோரி எனப் புகழ்ந்துள்ளார்.

இதையும் படிக்க: மனைவியைப் பழிவாங்க 1 வயது குழந்தைக்கு பாதரச ஊசியைச் செலுத்திய தந்தை.. ஜெர்மனியில் அரங்கேறிய கொடூரம்!