உலகம்

சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவளிக்க தயார் - இலங்கை சுதந்திரக் கட்சி

சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவளிக்க தயார் - இலங்கை சுதந்திரக் கட்சி

Veeramani

இலங்கையில் ரணில் பிரதமராகப் போவதாக கூறப்படும் நிலையில் புதிய திருப்பமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிரதமராக பதவியேற்றால் அவருக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இலங்கையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் அதே நேரத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு ஒன்றை அமைக்க அதிபர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.



இலங்கையில் இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக சஜித் பிரேமதாஸாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்ச, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து பேசியுளார். இதில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாஸ பிரதமராவதற்கே அதிக ஆதரவு உள்ளது. ஆனால் அதிபர் கோட்டாபய பதவி விலகினால்தான் பதவியேற்க முடியும் என சஜித் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில் அவர் பிரதமராக பதவியேற்றால் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். அதிபர் பதவி விலகினால் தான் பதவியேற்பேன் என வலியுறுத்தும் தருணம் இதுவல்ல என்றும் நிலைமை எல்லை மீறி சென்றுள்ளதை எதிர்க்கட்சி தலைவர் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசே இல்லாத நிலை ஏற்பட்டால் நெருக்கடி நிலை மேலும் மோசமடையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.