உலகின் அரிய வகை உயிரினமான வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி கென்யாவில் வேட்டைக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க காடுகளில் அதிகளவில் ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்ந்து வருகின்றன. இதில் கென்யா நாட்டின் கரிசா காடுகளில் அரிதிலும் அரிதான வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்ந்து வந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அதில் ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கியும், அதன் குட்டியும் வேட்டைக்காரர்களால் தற்போது கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக கென்யா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேட்டைக்காரர்களால் உலகின் அரியவகை வெள்ளை நிற பெண் ஒட்டகச் சிவிங்கி தனது குட்டியுடன் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது. இவற்றின் எலும்பு கூடுகள் கரிஸா பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாக கென்யா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்போது அந்தப் பகுதியில் ஒரேயொரு ஆண் ஒட்டகச்சிவிங்கி மட்டும் உயிரோடு இருப்பதாகவும் அதனை பாதுகாக்க அனைத்துவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கென்யா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் ஆப்பிரிக்க காடுகளில் மட்டும் 40 சதவித ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டையாடப்பட்டுள்ளன. ஒட்டகச்சிவிங்கிகள் அதன் தோலுக்காகவும் கறிக்காகவும் வேட்டைக்காரர்களால் கொல்லப்படுகிறது.
ஆப்பிரிக்க காடுகளில் மட்டும் 1985 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 1,55,000 ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்ந்து வந்தன. இப்போது 2015 கணக்கெடுப்பின்படி 97000 ஒட்டகச்சிவிங்கிகள் மட்டுமே இருக்கின்றன. இப்போது அரிய வகை வெள்ளைநிற ஒட்டகச்சிவிங்கியும் கொல்லப்பட்டுள்ளதால் உலகளவில் இருக்கும் விலங்கின ஆர்வலர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.