மலைப்பாம்பு எக்ஸ் தளம்
உலகம்

இந்தோனேசியா| ஒரே மாதத்தில் இரண்டாவது சம்பவம்.. 36 வயது பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு!

Prakash J

மத்திய இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள சிதேபா கிராமத்தைச் சேர்ந்தவர் சிரியாட்டி. 36 வயதான இவர், கடந்த ஜூலை 2ஆம் தேதி காலை 9 மணிக்கு, தனது குழந்தைக்காக மருந்து வாங்க அருகில் இருந்து மருந்துக் கடைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் அன்றிரவு அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது கணவர் அடியன்சா போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். போலீசார் அங்குள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், சிரியாட்டி எந்த கடைக்கும் போகவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஆள் கடத்தில் கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

எனினும், இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் சிரியாட்டி கிடைக்கவில்லை. மறுபுறம் சிரியாட்டியின் கணவர் தனது உறவினர்களுடன் சுற்றுப்புறங்களில் தேடியுள்ளார். அப்போது இவர் வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மனைவியின் செருப்பு மற்றும் உடைகள் கிடந்திருக்கின்றன.

இதனையடுத்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்போதுதான் 10 மீட்டர் தூரத்தில் பெரிய மலைப்பாம்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். வழக்கத்திற்கு மாறான சைஸில் வயிறு வீங்கிய நிலையில் அப்பாம்பு நகர முடியாமல் தவித்திருக்கிறது. சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு கணவர் தகவல் கொடுத்திருக்கிறார். பின்னர் போலீஸார் முன்னிலையில் பாம்பு வெட்டப்பட்டிருக்கிறது. அதன் வயிற்றுக்குள் சிரியாட்டி சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

இதையும் படிக்க: வெற்றிக் கொண்டாட்டம் முடிந்தபின் இங்கிலாந்துக்குப் பயணம்.. அவசரமாய் புறப்பட்டுச் சென்ற விராட் கோலி!

இந்தோனேசியாவில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் பலர் மலைப்பாம்புக்கு இரையாகி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த மாகாணத்தில் மட்டும், கடந்த ஒரு மாதத்தில் மலைப்பாம்பு விழுங்கியதன் மூலம் பெண் இறக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி, இதே மாகாணத்தில் உள்ள கலேம்பாங் கிராமத்தைச் சேர்ந்த ஃபரிதா என்ற 45 வயது பெண்மணி, மலைப்பாம்புக்கு இரையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, தென்கிழக்கு சுலவேசியின் டினாங்கியா மாவட்டத்தில் எட்டு மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று விவசாயி ஒருவரைச் சாப்பிட்டதாகவும், 2018-ஆம் ஆண்டு, தென்கிழக்கு சுலவேசியின் முனா நகரில் ஏழு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை விழுங்கியதாகவும், 2017-இல், மேற்கு சுலவேசியில் நான்கு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு விவசாயி ஒருவரை விழுங்கியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: ரோகித் மற்றும் விராட் ஜெர்சி நம்பருக்கு ஓய்வா? ராபின் உத்தப்பா எதிர்ப்பு!