உலகம்

“புதின் ஒரு போர் குற்றவாளி” - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

“புதின் ஒரு போர் குற்றவாளி” - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

webteam

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை அடுத்து அதை கண்டிக்கும் விதமாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை “போர்க்குற்றவாளி” என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் 2 வாரங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. அப்பாவி பொதுமக்கள் பலரும் பலியாகி வருகின்றனர். உக்ரைன் பொதுமக்கள் பலர் தங்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். ரஷ்யாவின் செயலை கண்டித்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் பிற நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை முன்னெடுக்க உதவும்.

இந்த தீர்மானத்தை குடியரசுக்கட்சி எம்.பி. லிண்ட்ஸே கிரஹாம் முன்மொழிந்தார். இதனை குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் என அனைவருமே ஆதரித்தனர். இந்த தீர்மானம் குறித்து ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சக் ஸ்கூமர் பேசுகையில், "உக்ரைன் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டுள்ள வன்முறைகளுக்கு புதின் கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்து புதினால் நிச்சயமாக தப்பிக்க முடியாது" என்றார்.