ஒவ்வொரு நாட்டின் சுதந்திரமும் அந்நாட்டின் வரலாறுகளில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. இன்னும் சில நாடுகளின் வரலாறு என்பதே அந்நாடு சுதந்திரம் அடைந்ததும் அதற்காக அம்மக்கள் நடத்திய போராட்டங்களில் இருந்தும் தான் துவங்குகிறது. இங்கு சுதந்திரம் எனப்படுவது காலணி ஆதிக்க நாடுகளில் இருந்து விடுதலை பெறுவது மட்டும் அன்று.
பன்னெடுங்காலமாக பிரபுக்களாலும் மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்த பிரான்ஸ் மக்கள், நாம் சுதந்திரமானவர்கள், நாம் நிமிர்ந்து நிற்க வேண்டும் என முடிவெடுத்து தேசத்தின் ஒட்டுமொத்த மக்களும் இணைந்து நடத்திக் காட்டிய புரட்சி மாபெரும் பிரெஞ்ச் ஜனநாயக புரட்சி. மன்னர்கள் மற்றும் அவர்களின் வகையறாக்களால் பிரெஞ்சு மக்கள் அடைந்து துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. மன்னரே எல்லாம் என்றிருந்த காலத்தை கடந்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என மக்கள் முன்னேறினர். 5 மே 1789 ஆம் ஆண்டு துவங்கிய புரட்சி 9 நவம்பர் 1799 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. மன்னர் கைகளில் இருந்த அதிகாரம் மக்களின் கைகளுக்கு மாற்றி அளிக்கப்பட்டது.
1789 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதியில் பாஸ்டில் கோட்டையை தாக்கியதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் பிரான்சின் தேசிய தினமாக ஜூலை 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த தினத்திற்கு அந்நாடு தனது நட்பு நாடுகளை சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம். இந்தாண்டு பிரான்ஸ் இந்திய பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது. முன்னதாக 2009 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு அங்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையத்திற்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
முன்னதாக பிரான்ஸ் செல்லும் முன் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா பிரான்ஸ் இடையிலான ராஜீய ரீதியிலான நல்லுறவு தொடங்கி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. பாதுகாப்பு, அணுசக்தி போன்ற பல துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்த உந்து சக்தியாக அமையும் என நம்புகிறேன். பிரான்ஸில் வாழும் இந்தியர்கள் மற்றும் இரு நாட்டு தொழிலதிபர்களையும் சந்தித்து பேச உள்ளேன்” என தெரிவித்திருந்தார்.
பிரான்ஸின் தேசிய தினத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அந்த அணிவகுப்பில் இந்திய முப்படைகளின் சார்பில் 269 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் ரஃபேல் போர் விமானமும் சாகச நிகழ்ச்சில் கலந்து கொள்கிறது.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தில், பிரான்ஸிடம் இருந்து இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்த நிலையில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் 3 ஸ்கார்பீன் நீர் மூழ்கிகளை மும்பையில் தயாரிக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் (Grand Cross of the Legion of Honour) வழங்கப்பட்டது. இதன் மூலம், இந்த பெருமையை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, அப்போதைய வேல்ஸ் இளவரசர் சார்லஸ், முன்னாள் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி ஆகியோர் இவ்விருதுகளை பெற்றவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.