உலகம்

பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்திற்கு எதிராக வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம்!

பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்திற்கு எதிராக வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம்!

EllusamyKarthik

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வங்கதேசத்தின் 50வது தேசிய தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக அந்த நாட்டின் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் உட்பட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வியாழன் அன்று டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். போராட்டம் தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போராட்டக்காரர்கள் டாக்கா வீதிகளில் பேரணி செய்ய முயன்ற போது தான் நிலமை கையை மீறி சென்றது என போலீசார் தெரிவித்துள்ளனர். இரு வேறு சங்கங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் தான் இந்த வன்முறைக்கு காரணம் என அரசை எதிர்த்து போராடியவர்கள் தெரிவித்துள்ளனர். அரசுக்கு ஆதரவான நிலை கொண்ட மாணவர்கள் தான் போராட்டத்தை வன்முறையாக மடை மாற்றி விட்டனர் எனவும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் தெரிவித்துள்ளனர். 

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் அங்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி இரு நாட்டு உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தகவல் : ABP