உலகம்

ஒரு நபரால் உருவாகிய 71 குழந்தைகள்... விந்தணு தானத்தில் சாதித்த அமெரிக்காவின் `தாராள பிரபு’

ஒரு நபரால் உருவாகிய 71 குழந்தைகள்... விந்தணு தானத்தில் சாதித்த அமெரிக்காவின் `தாராள பிரபு’

webteam

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இதுவரை 71 குழந்தைகளுக்கு தன்னுடைய விந்தணுவை தானமாக வழங்கியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் கைலே கோர்டி. 31 வயது இளைஞரான அவர் விந்தணு கொடையாளராக உள்ளார். நம் நாட்டில் ரத்தம், உடல் உறுப்பு ஆகியவற்றைத் தானம் செய்வதுபோல, அமெரிக்காவில் கைலே கோர்டி, விந்தணு தேவைப்படும் நபர்களுக்கு அதைத் தானமாக வழங்கி வருகிறார். இவற்றை இலவச சேவையாக அவர் செய்து வருவதால், அதிக அளவில் பெண்கள் இவரிடம் உதவி கேட்டு வருகின்றனராம்.

கேட்கும் பெண்களுக்கும் இந்த நன்கொடையை உரிய நேரத்திலும் அளித்து வருகிறாராம். இவரால், உலகம் முழுவதும் பல பெண்கள் பயனடைந்து உள்ளனர். அந்த வகையில் பார்த்தால் அவர் இதுவரை, 57 குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். அதாவது, அவர் அளித்த விந்தணு மூலம் இதுவரை 57 குழந்தைகள் பிறந்துள்ளன. இன்னும், 14 குழந்தைகள் வர தயாராக இருக்கின்றன. இதையடுத்து விரைவில், அவர் விந்தணு தானம் வழங்கியதில் செஞ்சுரி அடித்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது.

இதை ஒரு பொழுதுபோக்காகச் செய்துவரும் கைலே கோர்டி, “குழந்தை இல்லாமல் போராடும் குடும்பத்தினருக்கு உதவும் நோக்கோடு இதனை இலவச சேவையாகச் செய்துவருகிறேன். இதனால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் விந்தணு தானம் கேட்டு எனக்கு அழைப்புகள் வருகின்றன. இந்த விந்தணு நன்கொடை செய்வதைத் தவிர்த்து, வேறு பாலியல் தொடர்பு என்பது தனக்கு இல்லை. விந்தணுவை நான் பாதுகாக்க விரும்புவதால்தான் பாலியல் உறவை வைத்துக்கொள்ளவில்லை.

அதன்மூலம், ஒரு நபருக்கு விந்தணுவை தானமாக வழங்கும் வாய்ப்பை அளிக்கிறேன். நான் பாதுகாப்புடன் இருப்பதால், விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதையும் தானம் செய்யும்போது வெற்றியும் கிடைக்கிறது. இதனால் எனக்கு பொறுப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், எனது வாழ்க்கையில் தேவையான விஷயங்களை என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது. என்றாலும், நன்கொடைக்காக பிரயாணம் செய்வதில் எனக்கு விருப்பம் அதிகம். அதுவே, எனது முக்கிய பொழுதுபோக்காகவும் மாறிவிட்டது. பெண்களுக்கு நான் தேவையாக இருக்கும்வரை இதனை நான் தொடர்ந்து செய்வேன். இதை ஏற்கும் பெண்களை என்றும் வரவேற்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சென்ற அவர், 3 பெண்களுக்கு விந்தணுவை தானமாக வழங்கியதில் அவர்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர். பின்னர், நாடு திரும்பிய அவர் உள்நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு விந்தணு தானம் அளித்துள்ளார். இதன்மூலம் ஒரு மாதத்தில் 4 குழந்தைகள் பிறப்பதற்கான விந்தணு தானத்தை அவர் வழங்கியிருக்கிறார். உக்ரைனில் போர் தொடங்கிய முதல் நாளில் 30 வயதுடைய பெண் என்பவர், இவரின் விந்தணு மூலம் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். அவருக்கு விந்தணு தானம் தருவதற்காக, வாழ்நாளிலேயே மிக நீண்டதூர பயணம் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படத்தின் கதையம்சமே இதுதான். ஆணொருவர் தன் விந்தணுக்களை தானமாக அளித்து, பல குடும்பங்களுக்கு அவர்களின் தேவையை நிவர்த்தி செய்வார். இதையொட்டி இச்செய்தியை கண்ட தமிழ் அறிந்த இணையவாசிகள் பலரும், இவரை அப்படத்துடன் ஒப்பிட்டுவருகின்றனர்.

- ஜெ.பிரகாஷ்