இணையேற்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்ற பழமொழியுண்டு.. காலம் முழுவதும் நம்முடன் வாழப்போகும் ஒருவரை தேர்வு செய்ய காதல் என்ற ஒன்று இருக்கிறது. பெற்றோரே நமக்கு உரிய ஒருவரை தேர்வு செய்து கொடுக்க, உறவினர்கள், தரகர்கள், திருமண சேவை மையங்கள், திருமண சேவை இணையதளங்கள் என எத்தனையோ வழிமுறைகளை நாடுகின்றனர். உலகம் முழுவதுமே இணையேற்பு என்பது, தங்களது வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகவே மக்கள் கருதுகின்றனர்.
அதேவேளையில், ஒத்துவராத உறவில் இருந்து விலகுவதும் மிக மிக முக்கியம்தான். அதற்கான வழிமுறைகளும் இருக்கின்றன. “ஆண்டவா.. எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடுப்பா..” என பெரும்பாலான பெண்கள் தங்களது வாழ்வில் ஒருமுறையாவது இந்த வேண்டுதலை வைத்திருப்பார்கள். ஆனால், ஸ்பெயினில் கடவுளை அழைக்க வேண்டியதில்லை. திருமணத்தை நிறுத்துவதையே தொழிலாகக் கொண்ட ஒருவர் இருக்கிறார். குறிப்பு.. விருப்பத்தின் பேரில் மட்டுமே..
ஸ்பெயினைச் சேர்ந்தவர் எர்னஸ்டோ ரெய்னாரெஸ் வரேயா. திருமணத்தைத் திட்டமிடும் தொழிலைச் செய்துவந்தவர். “உங்களுக்கு திருமணத்தின்மீது விருப்பம் இல்லையா அல்லது சந்தேகமாக இருக்கிறதா? அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியவில்லையா? கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன்?” இதுதான் வரேயாவின் விளம்பரம்.
இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், அந்த விளம்பரத்தைக் கண்டு திருமணத்தை நிறுத்தச் சொல்லி ஏகப்பட்ட அழைப்புகள் வந்ததுதான். விளையாட்டுத்தனமாக வெளியிட்ட விளம்பரம் முழு வேலையாகவே மாறிப்போனது. அவர் தன்னை wedding destroyer என்றே அழைத்துக் கொள்கிறார்.
திருமணத்தில் விருப்பம் இல்லாதவர் வரேயாவிடம் திருமணம் நடைபெறும் நாள், நேரம், இடம் மூன்று தகவல்களையும் கொடுத்துவிடுவார்கள். கட்டணமாக, 500 யூரோ கொடுத்தால்போதும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ 47 ஆயிரம். ஏதாவது நாடகங்கள் நடத்துவார்.. உங்களது திருமணத்தையும் நிறுத்திவிடுவார். இதில் கூடுதலாக ப்ரீமியம் சேவையும் உண்டு. குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது கை நீண்டு ஒரு அறை கொடுத்துவிட்டால், அறை ஒன்றுக்கு 50 யூரோ கூடுதலாக கொடுக்க வேண்டும். இதில் இன்னொரு ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், டிசம்பர் வரை வரேயா சார் செம்ம பிஸி.. அத்தனை திருமணங்களை நிறுத்த வேண்டி இருக்கிறது. தலைவர்தான் தற்போது ட்ரெண்டிங் நபர்.