பைடன், கமலா ஹாரிஸ், ட்ரம்ப் pt web
உலகம்

அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்| ட்ரம்பிற்கு இருக்கும் சிக்கல், கமலா ஹாரிஸ்க்கு இருக்கும் பலம் என்ன?

Angeshwar G

விலகிய பைடன்

“அதிபராக அமெரிக்கர்களுக்கு சேவையாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பே எனது வாழ்வில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதே எனது நோக்கம் என்றாலும் கூட, ஜனநாயகக் கட்சி மற்றும் நாட்டின் நலன் கருதி தேர்தலில் இருந்து விலகுகிறேன். விரைவில் நாட்டு மக்களைச் சந்திக்கிறேன்” அதிபர் தேர்தலில் இருந்து விலகுவது தொடர்பாக பைடன் வெளியிட்ட அறிக்கை இது. தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தபின், அதுவும் தற்போது அதிபராக இருக்கும் ஒருவர் தேர்தலில் இருந்து விலகுவதற்கான காரணம் என்ன?

ஜோ பைடன் Vs டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமானால் இன்னும் 105 நாட்களே உள்ளன. ஆனால், அமெரிக்க அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு சம்பவங்கள் நடந்தவண்ணம் உள்ளன.

ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் களத்தில் இருந்தனர். இதில் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள், முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாக பார்க்கப்பட்டன.

அழுத்தங்களை ஏற்படுத்திக் கொடுத்த விவாதம்

ட்ரம்ப் - பைடன் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சியில் பைடனின் தடுமாற்றம், ட்ரம்ப் மீது நடந்த துப்பாக்கிச் சூடு, பைடன் மறதியில் வேறொரு பெண்ணை மனைவி என நினைத்து முத்தம் கொடுக்க முயன்றது, பைடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது என அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்தன. பைடனுக்கு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் அவரது வயது முதிர்வின் காரணமாகவே ஏற்பட்டது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.

இதில் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டது ட்ரம்ப் உடனான விவாத்தில் பைடன் தடுமாறியதற்குத்தான். இதன்காரணமாக அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே அதிருப்தி எழுந்தது. ஜனநாயகக் கட்சியினர் பலர் பைடனை போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். விவாதத்திற்கு முன் வந்த கருத்துக்கணிப்புகள் ட்ரம்ப் மற்றும் பைடன் என இருவருக்கும் சமமான வாய்ப்புகள் இருப்பதை வெளிப்படுத்திய நிலையில், விவாதத்திற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பைடனிற்கு சரிவைக் காட்டின. பைடன் தான் போட்டியிடுவதில் இருந்து விலகுவது குறித்து எந்த ஒரு காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும்கூட, கட்சிக்குள் தொடர்ந்த அழுத்தங்களே இதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்?

1968 ஆம் ஆண்டுக்குப் பின், அதிபராக இருக்கும் ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது இதுவே முதல்முறை. இந்நிலையில்தான், தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் பைடன். அதுமட்டுமின்றி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராகவும் முன்மொழிந்துள்ளார். அதிபர் வேட்பாளர் ரேசில் இருந்து கமலா ஹாரிஸை அப்புறப்படுத்தினால், ஜனநாயகக் கட்சி என்று தங்களுக்கு இருக்கும் ஒரு முற்போக்கான இமேஜிற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என அக்கட்சியினர் அஞ்சுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ்

எந்த ஒரு ஜனநாயகக் கட்சியின் மாற்று வேட்பாளரும் பைடனை விட பலம் மற்றும் பலவீனங்களை கொண்டிருக்கக்கூடும். இப்போது மக்கள் மத்தியில் இருக்கும் கேள்வி பைடனை விட கமலா ஹாரிஸ் வலுவான வேட்பாளராக இருப்பாரா என்பதும், ட்ரம்பிற்கு சரியான போட்டியாக அமைவாரா என்பதும்தான். ஆம் என்கின்றனர் ஜனநாயகக் கட்சியினர் சிலர். கமலா ஹாரிஸின் கடந்த கால பரப்புரைகள், அவரது சமீபத்திய செயல்திறன்கள், அவரது கடந்தகால வேட்புமனுக்கள் குறித்த தரவுகளை வைத்து வாதிடுகின்றனர்.

ட்ரம்பின் யுத்தி அவரை நோக்கியே திரும்புகிறது

பைடனை நோக்கி ட்ரம்ப் வைத்த மிக முக்கியமான தாக்குதல் அவரது வயதினை ஒட்டியதுதான். இதை ஒப்பிடும்போது, கமலா ஹாரிஸ் இளையவர். பைடன் தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்ததும், ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினரைப் பார்த்து வயது தொடர்பான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். ட்ரம்பிற்கு 78 வயது என்பதும் கமலா ஹாரிஸ்க்கு 59 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ட்ரம்பின் வாக்காளர்கள் அவரது வயதில் அக்கறை காட்டவில்லை என்பது கருத்துக்கணிப்புகளில் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞரான கமலா ஹாரிஸ் மிகச்சிறப்பாக பரப்புரை செய்யக்கூடியவர். ட்ரம்பிற்கு எதிராக தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார். சமீபத்தில்கூட பைடன் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தபோது, ஹாரிஸ் வடகரோலினா பகுதியில் கவர்னர் ராய் கூப்பருடன் இணைந்து தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் நடந்த சில கருத்துக்கணிப்புகள் கூட, ட்ரம்பிற்கு எதிரான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களில், பைடனை விட கமலா ஹாரிஸ் சற்றே முன்னணியில் உள்ளார் என தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி பைடனை விட வாக்காளர்களுடன் கமலா ஹாரிஸால் நல்ல விதமாக தொடர்பில் இருக்க முடியும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ட்ரம்பிற்கு இருக்கும் சிக்கல்கள் என்ன?

ட்ரம்பின் ஆட்சிக்காலத்திற்குப் பின், அமெரிக்காவில் குறிப்பாக பெண்கள், குடியரசுக் கட்சியைக் காட்டிலும் ஜனநாயகக் கட்சிக்கு அதிகளவில் வாக்களித்துள்ளனர். தற்போது கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அது இன்னும் அக்கட்சிக்கு பலமானதாக பார்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

ட்ரம்பின் ஆதரவாளர்களோ, பைடனை எதிர்கொள்வதை விட கமலா ஹாரிஸை எதிர்கொள்வது அத்துனை கடினமான காரியம் அல்ல என தெரிவிக்கின்றனர். ஆனால், ட்ரம்ப் தரப்பினருக்கும் இதில் சிக்கல்கள் உள்ளன. ட்ரம்ப் தனது பரப்புரையை ஒருவரை மட்டுமே எதிர்கொள்வதாக அமைத்துக்கொண்டார். அது பைடன். இந்த பரப்புரை மற்றும் விளம்பரங்களுக்காக மில்லியன் கணக்கான டாலர் செலவழிக்கப்பட்டுள்ளது. தற்போது கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் கிட்டத்தட்ட அத்தனையும் வீண் என்பதாகத்தான் பொருள். அதுமட்டுமின்றி, ட்ரம்பிற்கு இருக்கும் இன்னொரு சிக்கல் என்னவெனில், கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக இல்லாமல் கூட இருக்கலாம். தற்போதுவரை பைடன் முன்மொழிந்துள்ளாரே தவிர, கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளம்பரங்கள் என்பதைத் தாண்டி பரப்புரையில், ட்ரம்ப் ஆதரவாளர்கள் கமலா ஹாரிஸைத்தான் மிகத் தீவிரமாக எதிர்கொள்கிறார்கள். ஏனெனில் ட்ரம்பின் சட்ட சிக்கல்களை தெளிவாக எடுத்துச் சொல்வதில் கமலா ஹாரிஸ் வல்லவராகத் திகழ்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 105 நாட்கள் உள்ளன. இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ?