உலகம்

பாக். ஆதரவு பெற்ற காலீஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியர்கள் மீது திடீர் தாக்குதல்!

பாக். ஆதரவு பெற்ற காலீஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியர்கள் மீது திடீர் தாக்குதல்!

webteam

லண்டனில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற காலீஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியர்கள் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ் தானுக்கு எதிராகவும் பல்வேறு நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, நேற்று ஏராளமான இந்தியர்கள் கூடி, பாகிஸ்தானுக்கு எதிராகவும் மோடிக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். அப்போது அங்கு, வெளிநாடு வாழ் பாகிஸ்தான் நல சங்கத்தினரும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் வந்தனர். சீக்கியர்கள், காலீஸ்தான் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் அங்கு கூடியிருந்த இந்தியர்கள் மீது திடீரென்று தாக்குதல் நடத்தினர். 

பாகிஸ்தானின் ஐஎஸ் ஆதரவு பெற்ற அவர்கள், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவாக காஷ்மீரிகளும் சேர்ந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தாக்கியவர்கள் மீது இந்தியர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைத் தனர். பின்னர் அமைதியை குலைத்ததாக ஒருவரை கைது செய்துள்ளனர்.