கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அரச தம்பதியினர் அங்கு கலாச்சார பாடல் ஒன்றை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் கடந்த வாரம் கனடாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். அப்போது அங்கு ராஜ தம்பதியினரை வரவேற்கும் விதமாக பல கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்யூட் த்ரோட் சிங்கிங் (Inuit throat singing)எனப்படும் வாயால் இசையை உண்டு செய்யும் போட்டி நடைபெற்றது. கனடாவின் கலாச்சார போட்டியாக கருதப்படும் இதில், ஒரு போட்டியாளரின் சத்தத்தை கேட்கவிடாமல் மற்றொருவர் கத்த வேண்டும். ஆனால் இவை அனைத்தையும் ஒரு இசையை போல அவர்கள் செய்ய வேண்டும் என்பதே இந்த போட்டியின் விதி. முதல்முறையாக இவ்வகையான போட்டியை காணும் இளவரசர் சார்லஸும், அவரின் மனைவி கமிலாவும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தனர். ஒருக்கட்டத்தில் கையால் வாயை மூடிக்கொண்டு அவர்கள் தங்கள் கண்களில் வந்த கண்ணீர் துடைத்துக்கொண்டனர். இந்த போட்டி முடிவடைந்ததை தொடர்ந்து அதில் பங்கேற்றவர்களை ராஜ தம்பதியினர் சந்தித்து கைக்குலுக்கிக்கொண்டனர்.