உலகம்

ஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

webteam

அமெரிக்கா சென்று சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹவுடி மோடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

ஏழு நாள் அரசு முறைப் பயணமாக, டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற மோடி, நேற்றிரவு ஹூஸ்டன் சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள் கைக்குலுக்கி வரவேற்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற, எரிசக்தி துறையின் சிஇஓக்கள் கூட்டத்திலும், எண்ணெய் நிறுவன முதன்மை செயல் தலைவர்களின் வட்டமேஜை கூட்டத்திலும் பங்கேற்றார். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 16 முக்கிய நிறுவனங்கள் பங்கேற்றன. பின்னர், சீக்கிய அமைப்பினருடனும் கலந்துரையாடினார்.

‌ஹூஸ்டனின் என்ஆர்ஜி அரங்கில் ஹவுடி, மோடி நிகழ்ச்சி நடைபெறுகிறது. ‌இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிக்குப் பின் அமெரிக்க எம்பிக்களுடன் பிரதமர் மோடி தனியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். 23 ஆம் தேதி ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ஏற்பாடு செய்த பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 24 ஆம் தேதி பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். அன்று மதியம், இந்திய தூதரகம் சார்பில் ஐ.நா.வில் நடக்கும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 

தொடர்ந்து 25 ஆம் தேதி ப்ளூம்பெர்க் நிறுவன தலைவருடன் பிரதமர் மோடி வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்து கிறார். 27 ஆம் தேதி ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றும் பிரதமர் மோடி, தனது 7 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறார்.