உலகம்

ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!

ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!

webteam

கிரேட்டா கண்டிப்பாக கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

சுவீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க்(16). இவர் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டம் நடத்தினார். இதன்மூலம் அவர் உலகநாடுகளில் மிகவும் பிரபலம் ஆனார். 

ஐ.நா.வில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று பேசிய இவர் உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக சாடினார். வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயு வெளியேற்றத்தை எதிர்கொள்வதில், இளம் தலைமுறையினரை உலகத் தலைவர்கள் ஏமாற்றி விட்டதாக குற்றஞ்சாட்டினார். உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த கிரேட்டாவுக்கு டைம் பத்திரிகை கவுரவம் செய்துள்ளது.

2019-ம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டாவை டைம் பத்திரிகை தேர்வு செய்துள்ளது. அவள் ஒரு சாதாரண சிறுமி. உண்மையை உரக்கச்சொல்லியவர், இந்த ஆண்டின் சிறந்த நபர்'' என டைம் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''கிரேட்டா கோபத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நண்பர்களுடன் சேர்ந்து பழமையான திரைப்படங்களை பார்க்க வேண்டும். ஜில் கிரேட்டா...ஜில்'' குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தன் ட்விட்டர் பயோவை மாற்றிய கிரேட்டா, ''கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கும் சிறுமி. நண்பர்களுடன் சேர்ந்து பழமையான திரைப்படங்களை பார்த்துகொண்டு இருக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.