முகம்மது முய்சு ட்விட்டர்
உலகம்

மாலத்தீவு: பொதுத் தேர்தலில் சீனாவின் ஆதரவு பெற்ற அதிபர் முகம்மது முய்சுயின் கட்சி அமோக வெற்றி!

மாலத்தீவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் அதிபர் முகம்மது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) வெற்றிபெற்றுள்ளது.

Prakash J

மாலத்தீவின் 93 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக, நேற்று (ஏப்ரல் 21) நாடாளுமன்றத் தேர்தல், நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் அதிபர் முகம்மது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC), முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (MDP) உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 368 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 90 இடங்களில் போட்டியிட்ட அதிபர் முகம்மது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி, முடிவுகள் அறிவிக்கப்பட்ட 86 இடங்களில் 66 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

இது, சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமாகும். இதன்மூலம், முகம்மது முய்சுவால் நினைத்த சட்டங்களை நிறைவேற்றுவதில் பெரிய அளவில் எதுவும் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது. தவிர, சீனாவின் ஆதரவு நிலைபாட்டைக் கொண்டிருக்கும் முய்சு, தற்போது தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதிலும் தீவிரம் காட்டுவார் எனச் சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி 12 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பூச்சிக்கொல்லி மருந்து அதிகம்.. ஆய்வில் தகவல்.. எவரெஸ்ட் மீன் மசாலாவைத் தடை செய்த சிங்கப்பூர்!