உலகம்

அதிபர் வேட்பாளராக கோத்தபய ராஜபக்ச அதிகாரபூர்வ அறிவிப்பு 

அதிபர் வேட்பாளராக கோத்தபய ராஜபக்ச அதிகாரபூர்வ அறிவிப்பு 

webteam

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் தேசிய மாநாடு கொழும்புவில் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஜி.எல். பெரிஸ் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் அதிபர் வேட்பாளராக தமது சகோதரரான முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்ச போட்டியிடுவார் என மகிந்த ராஜபக்ச அறிவித்தார்.

ஒருவர் இரண்டு முறைதான் அதிபராக பதவி வகிக்கலாம் என இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் கட்டுப்பாடு இருப்பதால் மகிந்த ராஜபக்சவால் போட்டியிட முடியாத சூழலில் கோத்தபய ராஜபக்சவின் பெயரை அவர் முன்மொழிந்துள்ளார். கோத்தபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையும் வைத்திருந்ததால் அவர் பெயரை அறிவிப்பதில் சிக்கல் இருந்தது.

எனினும் அவர் கடந்த மே மாதம் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார். இலங்கை இறுதி போரின் போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் கோத்தபய ராஜபக்ச. அந்தப் போரின் போது இலங்கை ராணுவம் அப்பாவி மக்களை கொல்லக் காரணமாக இருந்தவர் என அவர்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.