உலகம்

ஆண் குழந்தைக்கு உத்தரவாதம் அளித்த மாந்திரீகர்-தன் தலையில் தானே ஆணியடித்துக்கொண்ட கர்ப்பிணி

ஆண் குழந்தைக்கு உத்தரவாதம் அளித்த மாந்திரீகர்-தன் தலையில் தானே ஆணியடித்துக்கொண்ட கர்ப்பிணி

Sinekadhara

மாந்திரீகரின் பேச்சைக்கேட்டு தனக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என ஒரு பெண் தன் தலையில் தானே ஆணியடித்துக்கொண்ட சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியிலுள்ள பேஷ்வர் நகரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கிற தாய் ஒருவர் மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார். ஸ்கேன் செய்து பார்த்ததில் மீண்டும் பெண் குழந்தைதான் கருவில் உருவாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். உடனே அவர் மாந்திரீகர் ஒருவரை நாடியிருக்கிறார். அவரும் தலையில் ஆணியடித்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும் என உத்தரவாதம் அளித்திருக்கிறார். மாந்திரீகரின் பேச்சை முழுமையாக நம்பிய அந்தப் பெண், தனது உச்சந்தலையில் தானே ஆணியடித்திருக்கிறார். ஆனால் சிறிது நேரத்தில் வலி தாங்க முடியாமல் அதை பிடுங்க முயற்சித்திருக்கிறார். எவ்வளவு முயன்றும் தன்னால் ஆணியை வெளியே எடுக்கமுடியாமல் போகவே அவர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர் ஹைதர் கான், தலையை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்ததில், இரண்டு இன்ச் அளவிற்கு ஆணி தலையில் இறங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆணி மூளையை தொடவில்லை. முதலில் உண்மையான காரணத்தை சொல்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற கர்ப்பிணி, அது சட்டத்திற்கு புறம்பானது என தெரிந்தவுடனே மருத்துவமனையிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இதுகுறித்து மருத்துவர் ஹைதர் கான் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அவர் அளித்த தகவலின் படியும், சிசிடிவி காட்சிகளை வைத்தும் போலீசார் அந்தப் பெண்ணை தேடிவருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், விரைவில் அந்த பெண் கண்டுபிடிக்கப்படுவார். அதேபோல் அவருக்கு இதுபோன்ற நம்பிக்கை அளித்த மாந்திரீகரும் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானை பொருத்தவரை, பெரும்பாலானோருக்கு இதுபோன்ற மாந்திரீகங்களில் நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் சில பள்ளிகள் இதுபோன்ற நம்பிக்கைகளை எதிர்க்கிறது. அதேபோல் தென் ஆசிய நாடுகளில் மகள்களைவிட மகன்கள்தான் பெற்றோருக்கு உதவியாக இருப்பர் என்ற நம்பிக்கையும் நிலவிவருகிறது என்று கூறினார்.