போர்ச்சுக்கல் நாட்டில் போதிய படுக்கைகள் இல்லாத காரணத்தால் சாண்டா மரியா மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மாற்றும் போது மாரடைப்பு ஏற்பட்டு இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததை அடுத்து, அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அந்நாட்டின் லிஸ்பன் நகருக்கு சுற்றுலா சென்றிருந்த இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான கர்ப்பிணிப் பெண் நியோனாட்டாலஜி சேவையில் காலியிடங்கள் இல்லாததால், சான்டா மரியா மருத்துவமனையில் இருந்து சாவோ பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டபோது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். ஆம்புலன்சில் அப்பெண்ணை அழைத்துச் செல்லும் வேளையில் அவருக்கு கார்டியோஸ்பிரேட்டரி எனும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவரது குழந்தை பத்திரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சேவியர் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கர்ப்பிணியின் மரணம் குறித்து விசாரணை துவங்கி நடைபெற்று வரும் வேளையில், நகரின் மிகப்பெரிய மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் போதிய படுக்கை இல்லாமல் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் மின்னல் வேகத்தில் அந்நாடு முழுவதும் பரவத்துவங்கியது. இதையடுத்து கர்ப்பிணி உயிரிழந்த செய்தி வெளியான 5 மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்டா டெமிடா தெரிவித்தார். தற்போது பதவியில் இருப்பதற்கான சூழ்நிலை இல்லை என அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மார்டா டெமிடா தான் கோவிட் -19 தொற்றுநோய் பரவலின் போது போர்ச்சுக்கல் நாட்டின் தடுப்பூசி வெளியீட்டை வெற்றிகரமாகக் கையாண்டதற்காக பரவலாகப் பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை, குறிப்பாக மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் பொது மருத்துவமனைகளில் உள்ள பிற பிரச்சனைகள் காரணமாக அவர் மீது சமீப காலமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்ததையும் அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.