உலகம்

மியான்மரில் ரோஹிங்ய அகதிகளைச் சந்திக்கிறார் போப் பிரான்சிஸ்

மியான்மரில் ரோஹிங்ய அகதிகளைச் சந்திக்கிறார் போப் பிரான்சிஸ்

webteam

மியான்மருக்கு சென்றுள்ள போப் பிரான்சிஸ் ரோஹிங்ய அகதிகளை சந்திக்க உள்ளார்.

மியான்மரில் வாழும் ரோஹிங்ய இனத்தவர்களை அழிக்க முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில், போப் பிரான்சிஸ் மியான்மர் மற்றும் வங்கதேச நாடுகளுக்கான 6 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக மியான்மர் சென்றுள்ள போப் பிரான்சிஸ், அந்நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சியை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து வங்கதேசம் சென்று காக்ஸ் பசாரில் உள்ள ரோஹிங்ய அகதிகள் முகாமை பார்வையிட திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக மியான்மரில் நடக்கும் வ‌ன்முறைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த போப், ரோஹிங்ய மக்களை சகோதர, சகோதரிகளே என குறிப்பிட்டு பேசினார். இதனால் ரோஹிங்ய மக்களை மீள்குடியேற்றம் செய்வதில் சிக்கல் நேரிடும் என கார்டினல்களே போப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இந்த பயணத்தின்போது ரோஹிங்யா என்ற வார்த்தையை பயன்படுத்த வே‌ண்டாம் என்றும் போப்பை கேட்டுக் கொண்டுள்ளனர்.

பதவியேற்ற நாளில் இருந்தே சர்வதேச அரசியல் குறித்து வெளிப்படையாகக் கருத்துகளைத் தெரிவித்து வருபவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ். ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தில் அவர் நேரடியாகத் தலையிட்டிருப்பது அவரது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே கவனிக்கப்படுகிறது.