ஷேக் ஹஸீனா முகநூல்
உலகம்

மக்கள் போராட்டத்தால் நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹஸீனா! யார் இந்த ஹஸீனா? கடந்து வந்த அரசியல் பாதை?

PT WEB

வங்கதேசத்தில் தனது 15 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுகட்டி, பிரதமர் பதவியை துறந்து நாட்டை விட்டு ஷேக் ஹஸீனா வெளியேறியதற்கு என்ன காரணம்? ஹஸீனா கடந்து வந்த அரசியல் பாதை என்ன என்று பார்க்கலாம்.

ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே பற்றி எரிய ஆரம்பித்தது வங்கதேசம். வங்கதேச விடுதலைக்காக கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் பங்கேற்ற முன்னாள் வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி இருந்தார் அவாமி லீக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ஷேக் ஹஸீனா. இந்தச் சட்டம் தான் ஒட்டுமொத்த வங்கதேசமும் கொந்தளிக்க காரணமாக அமைந்தது.

ஷேக் ஹஸீனாவின் அரசுக்கு எதிராகவும் கிளர்ச்சியை தூண்டிவிட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் சாரம்சங்களை ஆராய்ந்த வங்கதேச உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டு அளவை 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஷேக் ஹஸீனா அரசு ஏற்றுக் கொண்டாலும், அதற்கு எதிரானவர்களின் போராட்டமும், குறிப்பாக மாணவர்களின் ஆவேசமும் தணியவில்லை.

சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையின் அத்துமீறலால் உயிரிழந்தவர்கள், வன்முறையால் உடைமைகளை இழந்தவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்தனர். ஆளும் அவாமி லீக்கும், அதன் மாணவர் அமைப்பும் பாதுகாப்பு படைகளை ஏவி போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது..

இந்த வன்முறையில் மட்டும் சுமார் 300- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கு எந்த பலனும் இல்லாத அளவுக்கு போராட்டக்காரர்கள் மீண்டும், மீண்டும் ஒன்று கூடினார்கள்.

அதே சமயம் கலவரம் மற்றும் வன்முறைக்கு காரணமே எதிர்க்கட்சியினரின் மாணவர் அமைப்புகள் தான் என ஹஸீனா குற்றம்சாட்டினார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல என்றும், அவர்கள் அனைவருமே குற்றவாளிகள் என்றும் விமர்சித்தார் ஷேக் ஹஸீனா. இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்கப் போவதாக எச்சரித்திருந்த ஹஸீனா, கடந்த சனிக்கிழமை அன்று மாணவ அமைப்புகளின் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார்.

அப்போது ஹஸீனா பதவியை துறப்பது தான் பிரச்னைக்கு ஒரே தீர்வு என திட்டவட்டமாக மாணவ அமைப்பின் தலைவர்கள் ஓரே குரலாய் ஒலித்தனர். அதற்கு ஷேக் ஹஸீனா மறுப்பு தெரிவிக்க, மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வன்முறை கிளர்ந்தெழுந்தது.

தொடர்ந்து திங்கள் (நேற்று) அன்று டாக்காவை நோக்கி நெடிய பேரணி என்ற அழைப்பில் மாணவர்கள் போராட்டத்தில் குதிக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பாதுகாப்பு தடைகளை எல்லாம் கடந்து போராட்டக்காரர்கள் பிரதமரின் அலுவல் இல்லத்திற்குள் நுழைய, உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தனது சகோதரியுடன் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் 76 வயதான ஹஸீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து அவர் பதவியில் இருந்து விலகிவிட்டதாகவும், நாட்டை விட்டே தப்பிச் சென்றுவிட்டதாகவும் ராணுவ தளபதி வக்கார் உஸ் ஸமான் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இதே ராணுவம் கடந்த 1975 ஆம் ஆண்டு புரட்சி மூலம் வங்கதேத்தின் தந்தையாக போற்றப்படுபவரும், ஹஸீனாவின் தந்தையுமான முஜிபுர் ரஹ்மானை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது. அதிபராக இருந்த முஜிபுர் ரஹ்மான், அவரது மனைவி, 3 மகன்கள் என முதல் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜெர்மனியில் இருந்ததால் மகள்களான ஷேக் ஹஸீனாவும், அவரது சகோதரி ஷேக் ரெஹானாவும் மட்டுமே உயிர் பிழைத்தனர். 1981-ல் வங்கதேசம் திரும்பிய ஷேக் ஹஸீனா, மக்களாட்சி மலர்வதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1991-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஷேக் ஹஸீனாவின் அவாமி லீக் கட்சி தோல்வியடைந்தாலும், 1996-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வங்கதேசத்தின் பிரதமராக முதல்முறையாக பொறுப்பேற்றார் ஷேக் ஹஸீனா...

அப்போது முதல் 15 ஆண்டு காலம் அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்த ஷேக் ஹஸீனாவின் அரசியல் பயணம் டாக்கா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய மாணவர் போராட்டத்தால் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.