உலகம்

கர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த போலீசார் !

கர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த போலீசார் !

webteam

உணவகத்தில் வேலை பார்த்த கர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7000 டிப்ஸ் கொடுத்த போலீசார், பிறக்க போகும் குழந்தைக்கு வாழ்த்தும் தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் தெற்கு ஜெர்சியில் உள்ள உணவகத்தில் 23 வயதான கோர்ட்னே பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர் மெனு கார்டை பார்த்துவிட்டு, சாலட் ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த சாலட்டை கோர்ட்னே கொடுத்துவிட்டு வேறு வாடிக்கையாளரை நோக்கி சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த காவலர் கோர்ட்னேவுக்கு டிப்ஸ் கொடுத்ததாக உணவக உரிமையாளர் ஒரு தொகையை கோர்ட்னேவிடம் கொடுத்துள்ளார். அதனைக்கண்ட கோர்ட்னே நெகிழ்ச்சியில் அழுதே விட்டார். 

இந்திய மதிப்பில் ரூ.7000 டிப்ஸ் கொடுத்துள்ளார் அந்த காவலர். பணம் மட்டும் இல்லாமல் அவருக்கு கொடுக்கப்பட்ட விலை ரசீதில் '' உங்கள் தாய்மையை கொண்டாடுங்கள். முதல் குழந்தை என்பது மறக்கவே முடியாத நினைவு என்ற வாழ்த்தையும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய கோர்ட்னே, ''நானும் அந்த போலீசாரும் பேசிக்கொள்ளக்கூட இல்லை. அவர் அமர்ந்திருந்த டேபிளுக்கு முன் உள்ளவர்களிடம் என் தாய்மை குறித்து பேசினேன். அதை அவர் கேட்டிருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

போலீசார் வாழ்த்து தெரிவித்த அந்த ரசீதை சமூக வலைதளங்களில் பகிர்ந்த கோர்ட்னேவின் தந்தை, ''நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. நீங்கள் ஒரு நல்ல காவல் அதிகாரி மட்டுமல்ல. மனிதநேயமிக்கவரும் கூட'' என்று தெரிவித்துள்ளார். அந்த ரசீதை பகிர்ந்து பலரும் அந்த முகம் தெரியாத காவலரை பாராட்டி வருகின்றனர்.