பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர், அஹ்மத் ஃபர்ஹாத் ஷா. கவிஞரும் பத்திரிகையாளருமான இவர், கடந்த மே 15ஆம் தேதி ராவல் பிண்டியின் காரிஸன் நகரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அதே நாளில் அவரது மனைவி சையதா உரூஜ் ஜைனாப் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் (IHC) அவரை மீட்டுத் தருமாறு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ‘பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்’ (பி.டி.ஐ)-க்கு ஆதரவாகக் கருதப்பட்டதால், எனது கணவர் அரசுத் துறைகளின் அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகிறார். தவிர, பாகிஸ்தான் ராணுவம் குறித்து விமர்சித்ததற்காக ISI ஆல் கடத்தப்பட்டுள்ளார்” என தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கில் ராணுவம் மற்றும் சிவில் புலனாய்வு அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த மே 24ஆம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி மொஹ்சின் அக்தர் கயானியிடம், அஹ்மத் ஃபர்ஹாத் ஷா திர்கோட் காவல் துறையின் காவலில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில், இஸ்லாமாபாத்தின் காவல் துறைத் தலைவர், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதன் அதிகார வரம்பிற்கு வெளியே இருப்பதால் எனது துறை தலையிட முடியாது” என்று கூறினார். இதையடுத்து, “கடத்தப்பட்டவர் மீட்கப்படாவிட்டால், அது அரசின் தோல்வியாகிவிடும். காணாமல் போன கவிஞரின் குடும்பம் கிடைக்கப் பெறும் தகவல்களில் திருப்தி அடைந்தால் வழக்கை முடித்து வைக்கலாம். ஆனால் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கு தொடரும்” என்று கூறிய நீதிபதி, அவர் எப்படி காணாமல் போனார் என்பதை ஆராய்வதற்கு பெஞ்ச் ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய சட்ட அமைச்சர் தரார், “காஷ்மீரி கவிஞரின் வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்மறையான கவிதைகள் காரணமாகவே கவிஞர் அஹ்மத் ஃபர்ஹாத் ஷா கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம், நாட்டில் காணாமல் போனோர் விவகாரத்தை தனது கவிதை மூலம் எடுத்துரைத்த ஷாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.