உலகம்

தீவிரவாதத்தை ஒடுக்க நெட்வொர்க் இல்லை: மோடி வருத்தம்

தீவிரவாதத்தை ஒடுக்க நெட்வொர்க் இல்லை: மோடி வருத்தம்

webteam

தீவிரவாத இயக்கங்கள் அவர்களுக்குள் வைத்துள்ள நெட்வொர்க் போல, தீவிரவாதத்தை எதிர்க்கும் நாடுகளுக்கிடையே நெட்வொர்க் இல்லை என ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

ஜி20 உச்சி மாநாட்டில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை சுட்டிக்காட்டி, தீவிரவாதத்தை ஒழிக்கவும், உலகை அச்சுறுத்தலில் இருந்து மீட்கவும் உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கும், உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ்., அல்-கய்தா, போகோ ஹராம் போன்ற தீவிரவாத அமைப்புகளும் வேறு வேறு பெயர்களில் இயங்குகின்றன. ஆனால் ஒரே சித்தாந்தத்தைதான் கொண்டிருக்கின்றன என்று மோடி கூறினார்.

சில நாடுகள் தங்களுடைய அரசியலை சாதித்துக் கொள்வதற்காக, தீவிரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார். தீவிரவாத இயக்கங்கள் அவர்களுக்குள் வைத்துள்ள நெட்வொர்க் போல, தீவிரவாதத்தை எதிர்க்கும் நாடுகளுக்கிடையே நெட்வொர்க் இல்லை. தீவிரவாத இயக்கங்களுக்கு வெறுப்பை பரப்புவதும், கொத்துக் கொத்தாக மக்களை படுகொலை செய்வதும்தான் கொள்கை. தீவிரவாதத்துக்கு பணம் செலவிடும் நாடுகளும் அமைதியாக இருந்துவிட முடியாது என்று மோடி பேசினார்.

தீவிரவாதத்தை வேரறுக்க 11 அம்சத் திட்டத்தை மாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்தார். தீவிரவாதத்துக்கு நிதி பரிமாறப்படுவது தடுக்கப்பட வேண்டும். ஆயுதங்கள் கிடைக்கும் வழிகளைத் தடுக்க வேண்டும். நாடுகளின் தலைவர்கள் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் தங்கள் தங்கள் தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் பேசினார்.