ரஷ்யா-உக்ரைன் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதற்காக அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
16 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்காக ரஷ்யாவின் கசன் நகருக்கு பிரதமர் மோடி சென்றார். விமானநிலையத்தில் அவருக்கு ரஷ்ய அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் ஹோட்டலுக்கு வந்த பிரதமருக்கு இந்திய தேசிய கொடிகளை ஏந்தியும், சமஸ்கிருத பாடல்களை பாடியும் அங்குள்ள இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர். பாரம்பரிய இந்திய ஆடைகள் அணிந்த ரஷ்ய கலைஞர்கள், தங்கள் நடன நிகழ்ச்சி மூலம் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தனிப்பட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். பிராந்தியத்தில் அமைதி திரும்பவும் நிலைத்தன்மை ஏற்படவும் இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக ரஷ்ய அதிபரிடம் பிரதமர் தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் பிரச்னை, அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக ரஷ்யாவுக்கு வருவதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான ஆழமான நட்பும் ஒத்துழைப்பும் வெளிப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், 36 நாடுகளின் பிரதிநிதிகள், 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.