modi x page
உலகம்

“AI என்றால் அமெரிக்கா - இந்தியா” - பிரதமர் மோடி உற்சாக பேச்சு!

Prakash J

அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, லாங் ஐலேண்டில் நடைபெற்ற ‘மோடியும் அமெரிக்காவும்’ நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளி மக்களிடையே பேசுகையில்,

“செயற்கை நுண்ணறிவு என்றால் ‘A.I.’ என்று உலகம் சொல்கிறது. ஆனால் என்னைப் பொருத்தமட்டில் ஏஐ என்றால் அமெரிக்கா – இந்தியா என்று கூறுகிறேன். ஏஐ தொழில்நுட்பமானது புதிய உலகின் சக்தியாக உருவெடுத்துள்ளது. அந்த சக்தியை நாம் வலுப்படுத்த வேண்டும். இந்தியா - அமெரிக்கா உறவுகளுக்கு இந்த புதிய தொழில்நுட்பம் புதிய இலக்குகளை எட்டும். இந்தியா யார் மீதும் தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பவில்லை; ஆனால் உலகின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க விரும்புகிறது. உலக அமைதியை விரைவுபடுத்துவதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நியூயார்க்கில் உலகின் முன்னணி நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கலந்துகொண்டார். அப்போது, இந்திய மக்கள் பலனடையும் விதமாக, ஏ.ஐ.,(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவில் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க: பணிச்சுமையால் உயிரிழந்த இளம்பெண்.. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிர்மலா சீதாராமன்.. குவிந்த கண்டனம்!

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, “தொழில்நுட்ப வளர்ச்சியில் கூகுள் நிறுவனத்தின் முயற்சிகளும், இந்தியாவின் பார்வையும் ஒரே மாதிரிதான் உள்ளது. இந்தியாவில் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதன்மூலம், எங்களின் பிக்ஸல் போன் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை பெருமையாக உணர்கிறோம்.

இந்தியாவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார். இதன்மூலம், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மீதான சவால்கள் அதிகரித்துள்ளன. ஏ.ஐ. தொழில்நுட்பம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயங்களில் தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஏ.ஐ., தொழில்நுட்பத்தை மக்களுக்கு நன்மையுள்ளதாக மாற்றுவதே அவரது எண்ணமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

உலக அறிவியல் வளர்ச்சியின் புதிய வடிவமாக உருவெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம், உலக மக்களின் தேவை அனைத்தையும் விரல் நுனியில் கொண்டுவந்து கொட்டுமளவுக்கு மாற்றத்தை விதைத்துவருகிறது. முதலில் AI தொழில்நுட்பம், மனிதர்களின் வேலையைச் சுலபமாக்க உருவாக்கப்பட்டாலும், அதன் அபரிமிதமான வளர்ச்சியானது ஒருகட்டத்தில் ஹெல்த்கேர், ரொபோடிக்ஸ், கணினி மொழிகள், மரணத்தை கணிப்பது என கண்டுபிடிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே மனிதர்கள் பயன்படுத்தும் முக்கியமான வேலைகளின் ஒரு பகுதியாகவே மாறிவருகிறது. இதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அதன்மூலமாக ஆபத்துகளும் உருவாகி வருவது சமீபகாலங்களில் கவலையை உருவாக்கியுள்ளது.

இதையும் படிக்க: “இதுவே கடைசி” - தோல்வியுற்றால் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ட்ரம்ப் பதில்!