இந்தியா - உக்ரைன் புதிய தலைமுறை
உலகம்

இந்தியா- உக்ரைன் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து... உற்றுநோக்கும் உலகநாடுகள்

PT WEB

உக்ரைன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

போலந்தில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ரெயில் ஃபோர்ஸ் ஒன் மூலம் பத்து மணி நேரம் பயணம் செய்து உக்ரைன் தலைநகர் கீவ்வை அடைந்தார் பிரதமர் மோடி. உக்ரைன் தனி நாடாக மாறிய பின்னர் அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான்.

கீவ் தலைநகர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு உள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார். ரஷ்யா- உக்ரைன் போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடியும், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும் கூட்டாக அஞ்சலி செலுத்தினர். அங்கு மோடி சென்றபோது செலன்ஸ்கி அவரை ஆரத் தழுவி வரவேற்றார்.

உயிரிழந்த குழந்தைகள் குறித்த ஆவணப்படத்தை பார்த்த மோடி, கைகளை குவித்து பிரார்த்தனை செய்தார். குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிறிய பொம்மை ஒன்றையும் வைத்தார். அதன் தொடர்ச்சியாக 2 தலைவர்களும் அதிபர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இரு நாடுகளுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

விவசாயம், உணவு, மருத்துவம், கலாசாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் இருநாடுகளுக்கிடையில் ஓத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஏ.என்.ஐ- க்கு பேட்டியளித்த செலன்ஸ்கி,” உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவதில், இந்தியா அதன் பங்கை வகிக்கும். இந்தியாவிற்கு பெரிய செல்வாக்கு இருக்கிறது. இந்தியாவால் புதினை தடுத்து நிறுத்தவும், ரஷ்யா பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும் முடியும். இந்திய பிரதமர் ரஷ்யாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும்போது, அந்நாடு உக்ரைன் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு இந்திய பிரதமரை புதின் மதிக்கவில்லை என்பதே அர்த்தம்.

உலக அமைதி மாநாட்டை இந்தியாவில் நடத்தலாம் என, நான் மோடியிடம் கூறியிருக்கிறேன். இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதற்கான திட்டம் இருக்கிறது.” என்று தெரிவித்தார். முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் செலன்ஸ்கி, உக்ரைனின் இறையாண்மையை இந்தியா ஆதரிப்பதாக கூறியிருந்தார்.