டென்மார்க்கில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, 5 நாடுகளின் தலைவர்களை சந்தித்து பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம் உள்ளிட்டவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் நடைபெற்ற இந்திய-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் நடத்திய இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், ஸ்வீடன், நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம், உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதனிடையே ஸ்வீடன் பிரதமர் மகடலேனா ஆண்டர்சனை முதன் முறையாக சந்தித்த மோடி, தொழில்நுட்பம், முதலீடு, புதுமையான உத்திகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதித்தார்.
இதே போன்று நார்வே நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன், நீல பொருளாதாரம், பசுமை கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில், ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து ஐஸ்லாந்து பிரதமர் கேதரினை சந்தித்த மோடி, பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளை வெகுவாக பாராட்டினார்.
உச்சி மாநாட்டின் இடையே பின்லாந்து பிரதமர் சன்னா மரினை சந்தித்த பிரதமர் மோடி, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவினை பலப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்தார். இந்நிலையில் ஐரோப்பிய பயணித்தின் இறுதியாக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார்.
இதையும் படிங்க... “புவி பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியா வாருங்கள்”- டென்மார்க்கில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் இரு நாட்டு தலைவர்களும் பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான விவாதங்கள் மேற்கொண்டுள்ளனர்.