உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி pt web
உலகம்

உக்ரைன் பயணம்: நிவாரணப் பொருட்களுடன் சென்ற பிரதமர்.. உன்னிப்பாக கவனிக்கும் வல்லரசுகள்.. காரணம் என்ன?

இரண்டரை வருடங்களாக நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்தி, இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

கணபதி சுப்ரமணியம்

இது போருக்கான காலம் அல்ல

உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியுடன் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில், உற்ற நண்பனாக அமைதிப் பேச்சுவார்த்தையில் உதவ தான் தயாராக இருப்பதாக மோடி தெரிவித்தார். இது போருக்கான காலம் அல்ல எனவும் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே பிரச்னைகளை தீர்க்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தி வரும் நிலைப்பாட்டை பிரதமர் மோடி உக்ரைன் நாட்டில் நடத்திய பேச்சுவார்த்தைகளில் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு; பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்றார் செலன்ஸ்கி

சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோ நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 910 நாட்களாக தொடரும் உக்ரைன்-ரஷ்யா போரால் உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் மற்றும் உரங்களின் விலை கடுமையாக அதிகரித்து மக்கள் இன்னலுக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

4 ஒப்பந்தங்கள் கையொப்பம்

உக்ரைன் நாட்டுக்கு இதுவரை இந்திய பிரதமர் எவரும் பயணம் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டுக்கு, மோடியின் பயணத்தின்போது மருந்து பொருட்கள் மற்றும் ஜெனரேட்டர் போன்ற பல்வேறு நிவாரண பொருட்களை இந்தியா அளித்துள்ளது.

உக்ரைன் நாட்டுடன் நான்கு ஒப்பந்தங்கள் கையொப்பம் இடப்பட்டுள்ளன என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். வேளாண்துறை, கலாசாரம் மற்றும் மருத்துவத்துறை தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் உக்ரைன் நாட்டில் மக்களுக்கு தேவையான சமூக உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க இன்னொரு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்

பிரதமர் மோடியுடன் உக்ரைன் பயணத்தில் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்புச் செயலாளர் அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. போலாந்து நாடு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

விளாடிமிர் செலன்ஸ்கியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினாலும், அதில் போர் நிறுத்தமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவின் உக்ரைன் போர் நிறுத்த முயற்சியை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

போரால் விலை உயர்ந்த உணவுப் பொருட்கள்

உக்ரைன்-ரஷ்யா போரால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது மற்றும் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் கோதுமை மற்றும் சோளத்தை அதிகம் விளைவிக்கும் உக்ரைன் நாட்டிலிருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், உணவு தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஏற்கெனவே பணவீக்கத்தை உலகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்த நிலையில், உக்ரைன்-ரஷ்யா யுத்தம் பல்வேறு தட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது. பல்வேறு நாடுகள் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும்படி இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ள நிலையில், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மோடி அரசு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. ஆகவே, பிரதமர் நரேந்திர மோடியின் போர் நிறுத்த முயற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.