கனடாவில் உள்ள இந்து கோவிலில் நேற்று முன்தினம் தரிசனத்திற்கு சென்ற பக்தர்களை தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு, பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கனடாவில் சீக்கிய தலைவர்களில் ஒருவரான நிஜ்ஜார் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு காரணம் இந்தியா என்று கனடா குற்றம் சாட்டிய நிலையில், இந்தியா அதை மறுத்தது. இந்த விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதுடன், இரு நாடுகளிலிருந்தும் தூதரக அதிகாரிகள் சிலர் வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும் கனடா தொடர்ந்து இந்தியாவின் மேல் தங்களின் அதிருப்தியை தெரிவித்தபடி இருக்கிறது. இந்நிலையில், இச்சம்பவத்தின் எதிரொலியாக கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள், தொடர்ந்து இந்தியர்களின் மேல் ஆங்காங்கே தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிறன்று (நேற்று முன்தினம்) பிராம்ப்டனில் உள்ள கோவிலுக்கு சென்ற இந்து பக்தர்கள் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். அந்த வீடியோவை டொராண்டோவை தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடர்கள் பலரும் தங்களின் வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அந்த வீடியோவில், சிலர் காலிஸ்தானி கொடிகளையும் பேனர்களையும் பிடித்துக் கொண்டு இந்திய பக்தர்களுடன் மோதுகின்றனர். மேலும் ஒருவரையொருவர் கம்புகளால் தாக்கிக்கொள்கின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
காலிஸ்தான் ஆதரவாளர்களின் இத்தகைய செயலைக்கண்டித்த அந்நாட்டு காவல்துறை, ”வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்று தெரிந்துக்கொண்டு அவர்களை கைது செய்வோம். வன்முறையை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம்” என்று கூறிய நிலையில், இதுவரை மூவர் கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிகிறது... தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இச்சம்பவம் குறித்து பேசுகையில், “இச்சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது, ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்துள்ளார். கனடா நாட்டு எம்பி சந்திரா ஆர்யா என்பவர் தனது வலைதளத்தில், "கனேடிய காலிஸ்தானி ஆதரவாளர்கள்களால் இன்று சிவப்புக் கோட்டைத் (எல்லையை) தாண்டியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இவர்போலஏ அங்குள்ள அரசியல்வாதிகள் சிலரும் இச்சம்பவத்திற்கு தங்களின் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, “இந்திய தூதர்களை மிரட்டும் முயற்சிகளும் கோழைத்தனமானது. இத்தகை வன்முறைச் செயல்கள், இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.