ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டர்
உலகம்

இந்தியா - கனடா உறவு: தொடர்ந்து பல்டி? 10 நாட்களில் மாறிமாறி பேசும் ஜஸ்டின் ட்ரூடோ! பின்னணி என்ன?

இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையேயான விவகாரத்தில் கனடா நாட்டுப் பிரதமர் தொடர்ந்து பல்டி அடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Prakash J

கனடா - இந்தியா உறவில் விரிசல்!

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் (ஜூன் 18), கனடா - இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

ஜஸ்டின் ட்ரூடோ

இந்தியாவை ஆதரித்துப் பேசிய கனடா பிரதமர்!

இந்த நிலையில், நேற்று (செப். 29) செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ”சர்வதேச அளவில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இந்தியா உள்ளது. இதை யாராலும் நிராகரிக்க முடியாது. மேலும், உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இந்தோ - பசிபிக் கூட்டுக்கொள்கையின்படி, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதில் கவனமாக உள்ளோம். அதேசமயம், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கின் விசாரணையில் எங்களுடன் இந்தியா இணைந்து பணியாற்றி ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், நாட்டின் சட்டத்தைப் பின்பற்றி, இந்த வழக்கில் உண்மை என்ன என்பதை வெளிக்கொணர அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்க வேண்டும்” என அவர் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்தியா மீது குற்றஞ்சாட்டிய ஜஸ்டின் ட்ரூடோ!

முன்னதாக, இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, அதாவது கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி, கனடா நாட்டில் உரையாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ, "இந்த விவகாரத்தில் இந்தியாவை நாங்கள் தூண்டிவிடவோ அல்லது இந்தியாவுடனான பதற்றத்தை அதிகரிக்கவோ பார்க்கவில்லை. எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவதற்கும் சரியான செயல்முறைகள் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் தொடர்பு இருப்பது பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளதை கனட அரசின் ஏஜென்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை கனட அரசு தீவிரமாக பின்பற்றுகிறது" எனப் பேசியிருந்தார். ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்ததுடன், இரு நாடுகளுக்கு இடையே விரிசலும் அதிகரிக்கத் தொடங்கியது.

கனடா நாட்டுக்கு ஆதரவாகப் பேசிய ஜஸ்டின்!

இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் அதாவது, செப்டம்பர் 21ஆம் தேதி இதுதொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், ”நியூயார்க்கில் செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது: “கனடா மண்ணில் கனட குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்கத்தின் ஏஜென்ட்கள் ஈடுபட்டுள்ளனர் என்று நம்புவதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன. இந்திய அரசு இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் முழு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து, நீதியை நிலைநாட்ட எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் சட்டத்தின்படி ஆட்சி நடத்தும் ஒரு நாடு. கனடா மக்களைப் பாதுகாக்கவும், சர்வதேச அடிப்படையிலான சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும் நாங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டியுள்ளது. அதில்தான் இப்போதைக்கு எங்களின் கவனம் உள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ, மோடி

பிரதமர் மோடியிடம் பேசியதாகச் சொன்ன ஜஸ்டின்!

நாங்கள் சட்டத்தின் ஆட்சிப்படி நின்று, எந்தவொரு நாட்டிலும் அதன் சொந்த மண்ணில், ஒரு குடிமகன் கொலை செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசினேன். என்னுடைய கவலைகளை அவரிடம் பகிர்ந்துகொண்டேன்” எனத் தெரிவித்தார்.

”இந்தியாவுடன்  ஆதாரங்களைப் பகிர்ந்து கொண்டோம்”

தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து செப். 22ஆம் தேதி பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, ”நிஜ்ஜார் கொலையில், இந்திய ஏஜென்ட்களுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்திய அரசுடன் பல வாரங்களுக்கு முன்பே பகிர்ந்துகொண்டோம். இந்தியாவுடன் இப்பிரச்னையில் ஆக்கப்பூர்வமாக செயல்படவே விரும்புகிறோம். அவர்களும் எங்களுடன் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம். அப்போதுதான் இவ்விஷயத்தில் அடி ஆழத்தை அறிய முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.

இருதரப்பையும் விட்டுக்கொடுக்காமல் பேசும் கனடா பிரதமர்

இந்த நிலையில்தான் கனடா பிரதமர் ஜஸ்டின், நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் மீண்டும் பல்டியடித்துள்ளார். அதாவது, கடந்த 10 நாட்களில் இந்த விவகாரத்தில் தொடர்ந்து பல்டி அடித்துவருகிறார் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சீக்கியர்களை மனதில் வைத்தே அதற்கான ஆதரவு போக்கு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது கனடா. இதற்குக் காரணம், சீக்கியர்களின் வாக்கு வங்கியும் கனடா அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் தற்போதைய கருத்துக்கணிப்பில் ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை மனதில்வைத்தே கனடா குடிமக்களின் உரிமையை நிலைநாட்டும் விதத்திலும், அதேநேரத்தில் இந்தியாவின் உறவிலும் நீடித்தபோக்கைக் கொண்டிருக்க வேண்டும் என கனடா பிரதமர் எண்ணுவதாகக் கூறுப்படுகிறது. அதாவது இருதரப்பிலும் பாதிக்காதவாறு நடுநிலையோடு செயல்படுவதற்காக ஜஸ்டின் இப்படி விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.