உலகம்

‘கடவுளே ஒரு குழந்தையாவது உயிர் பிழைக்கட்டும்.. ப்ளீஸ்’ - 6 குழந்தைகளை இழந்த தந்தை கதறல்!

‘கடவுளே ஒரு குழந்தையாவது உயிர் பிழைக்கட்டும்.. ப்ளீஸ்’ - 6 குழந்தைகளை இழந்த தந்தை கதறல்!

சங்கீதா

துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கட்டட இடிபாடுகளுக்கிடையே தனது 6 குழந்தைகளை பறிக்கொடுத்த தந்தையின் கதறல் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.

துருக்கி - சிரியா எல்லைப்பகுதியில் கடந்த திங்கள் கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், துருக்கி மற்றும் சிரியா நிலைகுலைந்து போயுள்ளது. மக்கள் நன்றாக தூக்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால், பெரும்பாலான கட்டிடங்கள் தரை மட்டமாகின. மேலும் திங்கள் கிழமையும் அதற்கு அடுத்த நாளும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் கட்டிடங்கள் சரிந்து இடிபாடுகளுக்கிடையில் ஏராளமான மக்கள் மாட்டிக்கொண்டனர்.

மிக மோசமான நிலநடுக்கம் என்று கூறும் வகையில், ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைல், இதுவரை துருக்கியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர். கட்டட இடபாடுகளில் ஏராளமானோர்கள் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவ முன்வந்துள்ளன.

ஒருபக்கம் இந்த சோகத்துக்கு இடையே ஏராளமான கலங்க வைக்கும் சம்பவங்களும் காண முடிகிறது. தனது சொந்தங்களை இழந்து சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்ணீர் வடிக்கும் காட்சிகளையும் காண முடிகிறது. இந்நிலையில், சிரியாவில் நாசர் அல்-வாக்கா என்பவர், நிலநடுக்கத்தில் தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளை இழந்து கதறும் காட்சி கலங்கடித்துள்ளது. அங்குள்ள ஜண்டாரிஸ் நகரில் வசித்து வரும் நாசர் அல்-வாக்காவின் வீடும் நிலநடுக்கத்தில் சிக்கி சின்னப்பின்னமானது.

நாசர் அல்-வாக்காவை மீட்ட மீட்புப் படையினர், அடுத்ததாக இடிபாடுகளிக்கிடையே படுகாயங்களுடன் அவரின் இரண்டு குழந்தைகளை உயிருடன் இரவில் மீட்டனர். தூசிப் படிந்த நிலையில் அந்தக் குழந்தைகள் காப்பற்றப்பட்ட வீடியோவும் இருந்தது. மேலும் தொடர் மீட்புப் பணியின்போது நாசர் அல்-வாக்காவின் மற்றொரு குழந்தையும் மீட்கப்பட்டது.

எனினும், இடிபாடுகள் நிறைந்த கட்டடங்களுக்கிடேயே அமர்ந்து நாசர் அல்-வாக்கா இறந்துபோன தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக கண்ணீர் விட்டு அழுதார். இந்த நிலநடுக்கத்தில் அவர் எத்தனைக் குழந்தைகளை இழந்தார் என்பது தெரியவில்லை. எனினும், அவர் கொடுத்த பட்டியலின்படி, மொத்தம் 3 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என ஆறு குழந்தைகளை இழந்தாகத் தெரிகிறது. அவருக்கும் மொத்தம் எத்தனை குழந்தைகள் என்று தெரியாதநிலையில், குழந்தைகளின் சடலங்களை மீட்டபோது கண்ணீர்விட்டு கதறிய காட்சி நெஞ்சை பதறவைப்பதாக இருந்தது. தனது குழந்தையின் உடையை முகத்தில் மூடியவாறு கதறிக் கொண்டிருந்தார் நாசர் அல்-வாக்கா.

மேலும் நிலநடுக்க சம்பவத்தை அவர் நினைவுக் கூர்ந்தபோது, “வான்வழித் தாக்குதல்களுக்கு நாங்கள் பழகிவிட்டோம். ராக்கெட் மற்றும் பீப்பாய் குண்டுகளுக்கும் நாங்கள் பழகிவிட்டோம். இது எங்களுக்கு சகஜமாகிவிட்டழ. ஆனால் நிலநடுக்கம், அது கடவுளின் செயல். நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீடு அதிர்ந்தது. இதனால் நான் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து, “தயவுசெய்து கடவுளே, ஒருவராது பிழைக்கட்டும். எனக்கு என் குழந்தைகளில் ஒன்று வேண்டும் என்று சொன்னேன்” என்றுக் கதறிக் கொண்டிருந்தார். நிலநடுக்கத்திற்குப் பிறகு இரு நாடுகளிலும் சேர்த்து குறைந்தப்பட்சம் 8,70,000 மக்களுக்காவது உணவுத் தேவைப்படம் என்றும், மேலும் 5.3 மில்லியன் மக்கள் சிரியாவில் மட்டும் வீடுகளை இழந்திருப்பார்கள் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.