கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தைக் குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்தது. அந்த நேரத்தில், மாலத்தீவின் புதிய அதிபர் முகம்மது முய்சு, அரசுமுறை பயணமாக சீன நாட்டிற்குச் சென்றிருந்தது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் அங்கமாக மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு, அந்நாட்டு அதிபர் முய்சு காலக்கெடு விதித்ததும், மேலும் விரிசலுக்கு வழிவகுத்தது.
முய்சின் அறிவிப்பு காரணமாக, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு கடந்த மார்ச் மாதம் தாயகம் திரும்பியது. தொடர்ந்து, வரும் மே 10ஆம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் என்று மாலத்தீவு வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது. இதையடுத்து, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி உள்ள நிலையில், இந்தியா வழங்கிய விமானத்தை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்திடம் இல்லை' என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் காசன் மவுமூன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “மாலத்தீவைச் சேர்ந்த சில வீரர்கள் இந்திய விமானத்தை இயக்கும் பயிற்சியைத் தொடங்கி இருந்தனர். இருப்பினும், அவர்கள் பயிற்சியில் பல்வேறு நிலைகளைக் கடக்க வேண்டி இருக்கிறது. பல்வேறு காரணங்களால் நமது வீரர்களால் அதை முடிக்க முடியவில்லை. இதனால் இந்திய விமானங்களை இயக்கும் உரிமம் மாலத்தீவு ராணுவத்தில் யாருக்கும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
டோர்னியர் என்ற விமானம், இந்தியாவால் மாலத்தீவுக்கு வழக்கப்பட்டது. இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வந்தனர். மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.