விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய நேரத்தில் 37 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் விமானிகள் மெய் மறந்து தூங்கிய அதிர்ச்சி சம்பவம் எத்தியோப்பியாவில் அரங்கேறியுள்ளது.
சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்குச் சென்ற ET343 விமானத்தில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த இரண்டு விமானிகள் தூங்கியதால் அவர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கத் தவறிவிட்டனர். ஏவியேஷன் ஹெரால்டு வெளியிட்ட செய்தியின்படி, இந்த சம்பவம் ஆகஸ்ட் 15 அன்று (திங்கள் கிழமை) நடைபெற்றுள்ளது.
விமானம் விமான நிலையத்தை அணுகியபோது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிகள் தரையிறங்குவதற்கான சிக்னல்களை அனுப்பியுள்ளனர். ஆனால் விமானம் தரையிறங்கத் தொடங்கவில்லை. விமானிகள் தூங்கிவிட்ட நிலையில், போயிங் 737-ன் தன்னியக்க பைலட் (Auto Pilot) அமைப்பு விமானத்தை 37,000 அடி உயரத்தில் நிலையாக பறக்க வைத்துள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிகள் பலமுறை விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றும் அவர்களால் தூங்கிக் கொண்டிருந்த விமானிகளை எழுப்ப இயலவில்லை. விமானம் தரையிறங்க வேண்டிய ஓடுபாதையைத் தாண்டிச் சென்றபோது, தன்னியக்க பைலட் துண்டிக்கப்பட்டு அலாரம் ஒலிக்கத் துவங்கியுள்ளது. இந்த சத்தத்தை கேட்டபின்னர் விமானிகள் தூக்கத்தில் இருந்து விழத்ததாக ஏவியேஷன் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
பின்னர் 25 நிமிடங்களுக்குப் பிறகு விமானிகள் ஓடுபாதையில் விமானத்தை முறையாக தரையிறங்கினர். நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமான ஆய்வாளர் அலெக்ஸ் மச்செரஸும் ட்விட்டரில் இந்த நிகழ்வைப் பற்றி பதிவிட்டுள்ளார். "ஆழமான அக்கறை" என்று இந்த நிகழ்வைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். விமானியின் சோர்வுதான் இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.