உலகம்

சமூக வலைத்தளங்களில் வைரலான டச்சு ’சிறைப்பறவை’!

webteam

போலீசார் கைது செய்த ஒருவரின் தோளில் அமர்ந்திருந்த கிளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

நெதர்லாந்தில் உள்ள மத்திய டச்சு நகராமன அட்ரெக்ட் (Utrecht)-டில் கடை திருட்டு ஒன்றுக்காக, போலீசார் ஒருவரை கைது செய்தனர். அப்போது அவர் தோளில் கிளி ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரிய வில்லை. அந்தக் கிளியும் அவரை விட்டு செல்ல மறுத்துவிட்டது. அதையும் ஓர் அறையில் அடைத்த போலீசார், அதற்கு சாண்ட்விச், தண்ணீர் கொடுத்தனர். சாண்ட்விச்சை ருசி பார்த்த அந்த ’சிறைப்பறவை’, தனது எஜமானரை எதிர்பார்த்து கத்திக்கொண்டிருந்தது.

இதையடுத்து கிளியைப் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட போலீசார், சமீபத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக ஒருவரை கைது செய்தபோது, ரகசிய சாட்சியைக் கண்டோம். பிறகுதான் இங்கு பறவைகளுக்கு தனிச்சிறையோ கூண்டோ இல்லாததை உணர்ந்தோம். இதனால் தனி சிறையில் அடைத்தோம். இதை அந்தப் பறவையின் எஜமானரும் ஏற்றுக் கொண்டார். அதை நன்கு கவனித்துக்கொண்டோம். அன்று மாலை அவர் விடுவிக்கப்பட்டதும் கிளியையும் விடு வித்தோம். அது அவர் தோளில் அமைதியாக போய் உட்கார்ந்துகொண்டது. அந்தக் கிளியிடம் எந்த விசாரணையும் நடத்தப் படவில்லை.’’ என்று தெரிவித்திருந்தனர்.

போதாதா நம் நெட்டிசன்களுக்கு? ஏகப்பட்ட நக்கல், நையாண்டி, கிண்டல் கமென்ட்களை தெறிக்க விட்டுவிட்டனர், சமூக வலைத்தளங்களில்.

அதில் ஒருவர், ’குற்றவாளியின் அடையாளத்தை பாதுக்காக்க, கண்ணை மறைக்க வேண்டாமா?’ என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர் கிளிக்கு சட்ட உதவி செய்ய தயாராக இருப்பாதக் கூறியுள்ளார்.