இத்தாலி முகநூல்
உலகம்

இத்தாலி: குப்பையிலிருந்து எடுக்கப்பட்ட ஓவியம்... 60 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த ருசீகர சம்பவம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

நம்மில் பலருக்கும் பழைய பொருட்கள், கலைப்பொருட்களை சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கும். அந்தவகையில், இத்தாலியில் பழைய பொருட்களை சேகரிக்கும் தொழிலாளியான லுங்கி லோ ரோஸா என்பவர், 1962 ஆம் ஆண்டு ஒருநாள் கேப்ரி தீவில் உள்ள பங்களா ஒன்றின் குப்பையிலிருந்து ஒரு அழகான ஓவியத்தை எடுத்துள்ளார்.

லுங்கி லோ ரோஸா வின் பழைய குடும்பம்

அதை வீட்டுக்கு கொண்டு சென்றபோது ‘இதுதான் பின்நாட்களில் தன் குடும்பத்துக்கு பணத்தை கொட்டி கொடுக்கபோகிறது’ என்று அவருக்கு தெரியவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டு வயது முதிர்வால் லுங்கி லோ ரோஸா இறக்கவே, இறப்பதற்கு முன்பாக, தனக்கு பிடித்தமான அந்த ஓவியத்தை தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு இறந்துள்ளார்.

அவரின் நியாபகமாக, மனைவியும் அந்த ஓவியத்தை தன் வீட்டு சுவற்றில் ஒரு ஓரமாக மாட்டியுள்ளார். இந்தநிலையில், லுங்கி லோவின் மகன், சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு, தனது வீட்டில் மாட்டி இருந்த அந்த ஓவியத்தை எதார்த்தமாக ஆராய்ந்து பார்த்துள்ளார். அப்போது அது பார்ப்பதற்கு பிக்காசோவின் ஓவியம் போல இருந்துள்ளது.

இதனால், பெரும் வியப்பில் ஆழ்ந்த லுங்கி லோவின் மகன், ஓவியத்தில் இருப்பது, பிக்காசோவின் கையெழுத்து என்று உறுதி செய்துகொண்டார். மேலும், இந்த ஓவியம் இப்போது பிரெஞ்சு புகைப்படக் கலைஞரும் கவிஞருமான டோரா மாரின் சிதைந்த உருவமாக நம்பப்படுகிறது. டோரா மார், பிக்காசோவின் காதலராக இருந்தவர்.

டோரா மாரின் மற்றொரு புகைப்படம்

இதனையடுத்து, இந்த ஓவியத்தின் மதிப்பு இப்பொழுது எவ்வளவாக இருக்கும் என்று சோதிக்கவே, சுமார் 50 கோடி அதாவது $6 மில்லியன் என்று அறிவே, அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் லுங்கி லோவின் மகன்.

இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்றாக மாறி வருகிறது. மேலும், 20 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஓவியராக கருதப்பட்ட பிக்காசோவின் ஓவியங்கள் இன்றும் பல கலைப்பிரியர்களால் விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்பதால், லோவின் குடும்பம் தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது என சிலாகிக்கின்றனர் நெட்டிசன்கள்!