பிரிட்டனில் பிரபல உணவு நிறுவனத்தில் மீல்ஸ் ஆர்டர் செய்த ஒருவருக்கு உணவுடன் சிறுநீர் அடங்கிய பாட்டில் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உருமாற்றமடைந்த கொரோனா தாக்கத்தால் நாடு தழுவிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளியே நடமாட முடியாததால் பலரும் தங்கள் உணவுகளுக்காக ஆன்லைன் உணவு நிறுவனங்களை சார்ந்திருக்கின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 21ஆம் தேதி காலையில், ‘HelloFreshUK’ என்ற உணவு டெலிவரி நிறுவனத்தில் மீல்ஸ் ஆர்டர் செய்த ஆலிவர் மெக்மேனஸ் என்ற ட்விட்டர் பயனர், ‘’@HelloFreshUK, நான் மிகவும் எளிமையாகச் சொல்கிறேன். நான் ஏன் எனது உணவு ஆர்டருடன் யாரோ ஒருவருடைய சிறுநீர் அடங்கிய பாட்டிலை பெற்றேன். இதற்கு உங்களுடைய பதிலை எதிர்பார்க்கிறேன்’’ என்று குறிப்பிட்டு, ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், ‘’உங்களுடைய முகவரியை அனுப்புங்கள். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இதை நான் அனுப்பி வைக்கிறேன்’’ என்றும் கூறியிருந்தார்.
அவர் பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே, சமூக ஊடகங்களில் அந்த புகைப்படம் வைரலாகி பலதரப்பட்ட கமெண்ட்டுகளையும் பெற்றது. சிலர் நக்கலாக அது ஆப்பிள் ஜூஸ் என்று குறிப்பிட்டனர். சிலர் HelloFresh நிறுவனத்தில் குளிர்பானங்களை ஆர்டர் செய்யமுடியாது என்று கூறினர். சிலர் டெலிவரி வாகன ஓட்டுநர் டாய்லெட் செல்லும் நேரத்தை மிச்சப்படுத்த பாட்டிலை பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறினர். எனினும், சமூக ஊடகங்களில் இந்த புகைப்படத்திற்கு காரசாரமாக கமெண்டுகள் வந்து குவிந்தன.
இதற்கு HelloFresh நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியிருக்கிறது. அதில், ‘’இதுகுறித்து உங்களிடம் மன்னிப்பு கோர எங்களுக்கு வார்த்தைகளில்லை. நேரடியாக எங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் இதுகுறித்து மிகவிரைவாக நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே பத்திரிகை மற்றும் ஊடகங்களில் இருந்து என்ன நடந்தது என கேட்பதற்காக தொடர்ந்து அழைப்புகளும், செய்திகளும் வந்துகொண்டே இருப்பதால் தனது ட்வீட்டுகளை டெலிட் செய்துவிட்டதாக ஆலிவர் கூறியிருக்கிறார்.
பெர்லினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமான HelloFresh, அமெரிக்கா, பிரிட்டன், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக மிகப்பெரிய உணவு டெலிவரி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.