உலகம்

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்குகிறது பிலிப்பைன்ஸ்

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்குகிறது பிலிப்பைன்ஸ்

Sinekadhara

பிரம்மோஸ் ஏவுகணைகளை முதல் முறையாக ஏற்றுமதி செய்வதற்கான விற்பனை ஆணையை இந்தியா பெற்றுள்ளது. சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கவுள்ளது பிலிப்பைன்ஸ்.

இந்திய - ரஷ்ய கூட்டு தயாரிப்பான, சூப்பர்சோனிக் வகையை சேர்ந்த பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியாவின் பிரம்மோஸ் ஏரோஸ்பேன் பிரைவேட் நிறுவனம் உருவாக்கி வருகிறது. நீர்மூழ்கிகள், போர் கப்பல்கள், விமானங்கள் என அனைத்து பரப்பில் இருந்தும் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்த முடியும். அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட இந்த ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து வாங்க பிலிப்பைன்ஸ் முன்வந்துள்ளது. இதற்காக 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் வகையிலான பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து, இந்தியா வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத் தலைவர் சதீஸ் ரெட்டி, நிலத்தில் இருந்து வான் எல்லையை தாக்கி அழிக்கும் ஆகாஷ், அஸ்திரா, டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ரேடார்கள் உள்ளிட்ட தளவாடங்களை வாங்கவும் ஒரு சில நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறினார். இதன் காரணமாக ஏற்றுமதி தரத்திற்கேற்ப இந்த தளவாடங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.