பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்படும் வானொலி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் ஜுவான் ஜுமலன். அவர், மிசாமிஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தில் கலம்பா நகரில் உள்ள வீட்டில் இருந்தபடியே, லைவ் நிகழ்ச்சி ஒன்றை நடத்திக்கொண்டு இருந்தார். மக்கள் அதனை கவனித்துக்கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் ஜுவான் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ஜுவான் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
ஜானி வாக்கர் என்ற பெயரில் அறியப்படும் ஜுவான், அவருடைய இல்லத்திலேயே வானொலி நிலையம் அமைத்து செயல்படுத்தி வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜுவான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறிக்க முற்படுவதும் வீடியோவில் பதிவாகி இருப்பதால், அதனடிப்படையிலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
’அவரது கொலை குறித்து சிறப்பு புலனாய்வு அதிரடிப் படை அமைக்கப்பட்டு, விரைவாக வழக்கு விசாரிக்கப்படும்’ என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், கொலையாளிகளைக் கண்டுபிடித்து, கைதுசெய்து விசாரணை நடத்துமாறு தேசிய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், “பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் நமது ஜனநாயகத்தில் பொறுத்துக்கொள்ளப்படாது. பத்திரிகைச் சுதந்திரத்தை அச்சுறுத்துபவர்கள், அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த லைவ் நிகழ்ச்சியின்போது பதிவான வீடியோ, ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. எனினும், நிகழ்ச்சியை கவனித்தவர்களில் சிலர் அதனை பதிவு செய்துள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் முதல் தற்போது வரை 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.