ரஷ்யா - உக்ரைன் போர் pt web
உலகம்

ரஷ்யா - உக்ரைன் போருக்கு தீர்வு கிடைக்குமா? சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சிமாநாடு.. நடந்தது என்ன?

PT WEB

செய்தியாளர் - ஜி.எஸ். பாலமுருகன்

அமைதி உச்சி மாநாடு

உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. மேற்கு உலக நாடுகளுடன் இணைந்து உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே கிட்டத்தட்ட 28 மாதங்களாக பரஸ்பரம் தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனும் ரஷ்யாவும் அமைதிப் பாதையில் திரும்பும் வகையில் சுவிட்சர்லாந்தின் லூசர்ன் நகரில் அமைதி உச்சி மாநாடு தொடங்கியுள்ளது.

இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றுள்ளார். அமெரிக்கா சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பங்கேற்கிறார். ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட சுமார் 100 நாடுகளும் அமைப்புகளும் கலந்து கொண்டுள்ளன. எனினும், ரஷியாவும் சீனாவும் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என ஜெலன்ஸ்கி வலியுறுத்தி வந்த நிலையில், இந்தியா சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

உக்ரைன் அதிபர் 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுட்டிக்காட்டிய 10 அம்ச அமைதித் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் உச்சி மாநாடு நடைபெறுகிறது. ரஷ்ய தாக்குதலை நிறுத்துதல், ரஷ்ய படைகளை திரும்பப் பெறுதல், போருக்கு முந்தைய எல்லைகளை மீட்டெடுத்தல், ரஷ்யாவின் போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை நிறுவுதல், பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுத்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கும்.

உக்ரைன் விதிமுறைகளை ஏற்காத ரஷ்யா

எனினும் உக்ரைனின் விதிமுறைகளை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு, நேட்டோ அமைப்பில் சேரும் முடிவை கைவிட்டால், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இதை நிராகரித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உலகின் பெரும்பகுதி நாடுகள் தங்கள் பக்கம் இருப்பதாக கூறுகிறார்.

சுவிட்சர்லாந்து அமைதி உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, ரஷ்யாவின் தாக்குதலால் உருக்குலைந்து காணப்படும் உக்ரனை மீண்டும் மறுஉருவாக்கம் செய்யவும், மனிதாபிமான தேவைகளை நிவர்த்தி செய்யவும் ஒன்றரை பில்லியன் டாலருக்கும் அதிகமான உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போருக்கு தீர்வு கிடைக்குமா?

உக்ரைனில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரஷ்ய வீரர்கள் போரில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் உக்ரைனின் டொனெட்ஸ்க் (DONETSK) மற்றும் லுஹான்ஸ்க் (LUHANSK) ஆகிய இரண்டு பிராந்தியங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. கெர்சன் (KHERSON) மற்றும் சபோரிஜியாவை (ZAPORIZHZHIA) பகுதிகளையும் ஆக்கிரமிக்க ரஷ்யா முயற்சிக்கிறது.

சுவிட்சர்லாந்து அமைதி உச்சி மாநாடு மூலம் உக்ரைன் போருக்கு தீர்வு கிடைக்குமா என்று உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், மேற்குலக நாடுகள் தங்கள் வலிமையை ரஷ்யாவுக்கு காட்டவே கூடியுள்ளதாக சர்வதேச அரசியலை கூர்ந்து கவனிப்பவர்கள் கூறுகிறார்கள்.