உலகம்

பிரான்ஸில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்.. தலைநகரில் குவிந்த 5000 பேர்

rajakannan

பிரான்ஸ் நாட்டில் நான்காவது வாரமாக அதிபர் மக்ரோனுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் சுற்றுச்சூழல் பாதிப்பைக் காரணம் காட்டி பல்வேறு விதமான கொள்ளை முடிவுகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் மீதான வரியை கடுமையாக உயர்த்தினார். இதன் விளைவாக நவம்பர் 17 ஆம் தேதி சிறிய அளவில் கார் ஓட்டுநர்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டம் நாளடைவில் மக்களின் போராட்டமாக வெடித்தது. நாட்களை கடந்து, வாரங்களை கடந்து இந்தப் போராட்டம் தொடர்ந்தது. கார் ஓட்டுநர்களின் மஞ்சள் ஆடையை அணிந்து ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

மஞ்சள் ஆடை போராட்டம் பிரான்ஸ் நகரையே ஸ்தம்பிக்க வைத்தது. தலைநகர் பாரிஸ் மட்டுமல்லாமல் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் போராட்டங்களின் தாக்கம் இருந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையாக வெளியில் தெரிந்தாலும், வாழ்வதற்கான பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். கடந்த வாரம் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், எமர்ஜென்ஸி அறிவிக்கலாமா என்ற யோசனைக்கே பிரான்ஸ் அரசு வந்தது. அதிபர் மக்ரோன் பல நாட்களாக விட்டுக் கொடுக்காமல் அடம்பிடித்து வந்தார். 

இறுதியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை பிரான்ஸ் அரசு ரத்து செய்தது. இதன் மூலம் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என்று நம்பப்பட்டது. ஆனால், பிரான்ஸ் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்தப் போராட்டங்களின் தொடக்கம் முதல் வார நாட்களின் குறைவான அளவில், சனி, ஞாயிறுகளில் அதிக அளவிலும் மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டு வந்தனர். அதேபோல், சனிக்கிழமையான இன்றும் பாரிஸ் நகரில் போராட்டங்கள் நடைபெற்றது. 

இந்தப் போராட்டங்களில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்களை கலைக்க பிரான்ஸ் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். தலைநகரில் மட்டும் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் அரசுக்கு எதிரான போராட்டங்களை கண்காணித்து வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களை பயங்கரவாத அமைப்புகள் தூண்டி விடுவதாக பிரான்ஸ் அரசு குற்றம்சாட்டியுள்ளது.