எகிப்து பிரமிடு எக்ஸ் தளம்
உலகம்

எகிப்து|கிரேட் பிரமிடு உச்சியில் இருந்த நாய்; பாராகிளைடிங்கில் பறந்த நபர் படம்பிடித்த ’வாவ்’ காட்சி!

எகிப்தின் பிரமிடுகளில் நாய் ஒன்று இருப்பதை பாராமோட்டரிஸ்ட் கண்டுபிடித்துள்ளார்.

Prakash J

எகிப்து என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பிரமிடுகள்தான். அங்குள்ள பல பிரமிடுகள், சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இவை, 4,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. இன்றும் அவற்றின் கட்டுமானம் குறித்து பேசப்பட்டு வருகிறது. எகிப்திய பிரமிடுகள் பண்டைய உலகின் வரையறுக்கப்பட்ட கட்டடக்கலை சாதனைகளில் ஒன்றாகும். பொறியியலின் நம்பமுடியாத சாதனையான பிரமிடுகள் பற்றி, ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், எகிப்தின் பிரமிடுகளில் நாய் ஒன்று இருப்பதை பாராமோட்டரிஸ்ட் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

எகிப்தின் 118 பிரமிடுகளில் மிகப்பெரியது, கிசாவின் கிரேட் பிரமிடு ஆகும். இந்தப் பிரமிடுகளில் ஏறுவதற்குச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய பிரமிடுகளை பாராகிளைடிங் மூலம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம். அந்த வகையில், இந்த பிரமிடுகளின் மீது பறந்தபோது பாராமோட்டரிஸ்ட் அலெக்ஸ் லாங்கால் என்பவர், அங்கு ஒரு நாய் இருப்பதைக் கண்டறிந்தார். அந்த நாய், அங்குவரும் பறவைகளைக் குரைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த நாய் அங்கு எப்படிச் சென்றது என்பது குறித்த விளக்கம் எதுவும் தரவில்லை. இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய்| உயிரிழந்ததாகப் பரவிய தகவல்.. மும்பை போலீஸ் சொல்லும் உண்மை என்ன?

இதுகுறித்து பயனர் ஒருவர், “அது இப்போது அதனுடைய பிரமிடு” எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவரோ, ''சில சமயம் உயரமான மலையில் ஏறி சில பறவைகளைப் பார்த்து குரைக்க வேண்டும், மனிதனே'' என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது பயனர், ”அது நாய் அல்ல. அதுதான் எகிப்திய கடவுள் அனுபிஸ். அவர் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் இறந்தவர்களின் வழிகாட்டியாகவும், கல்லறைகளின் பாதுகாவலராகவும் கருதப்படுகிறார். அதனால்தான் பிரமிடுக்கு மேல் அது உள்ளது” என தெரிவித்துள்ளார்.

எகிப்தில் உள்ள பிரமிடுகளில் மிகவும் பெரியது கிசா. இது, மிகவும் பழைமையான கட்டடங்களில் ஒன்று. எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அருகில், நைல் நதிக்கு 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது. கிசா பிரமிடுக்குள் குஃபு மன்னரின் கல்லறை இருக்கிறது. பண்டைய அதிசயமாகக் கருதப்படும் இது, 2580-2565 BCஇல் பார்வோன் குஃபுவின் ஆட்சியின்போது கட்டப்பட்டது. இந்த கிரேட் பிரமிடு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகக் கருதப்படுவதுடன், மறுசீரமைப்பு செய்யப்பட்டு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: பாபாசித்திக் படுகொலை| சல்மான்கானுக்கு மிரட்டல்.. மிகப்பெரிய நெட்வொர்க்.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?