அமெரிக்காவில் போராட்டம் ட்விட்டர்
உலகம்

அமெரிக்க கல்லூரிகளில் பாலஸ்தீன மாணவர்கள் கைது - சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ

அமெரிக்காவில் காஸா போருக்கு எதிரான போராட்டம் வெடிப்பு

Jayashree A, Prakash J

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராக, அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் காஸா போரை நிறுத்தக்கோரி பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்தப் போராட்டத்தின் அடுத்த நகர்வாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில், பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் மற்றும் ஆஸ்டின், டெக்சாஸில் உள்ள பல்கலைக்கழகங்களில் புதன்கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில், போருக்கு எதிர்ப்பு தெரிவித்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில், பாலஸ்தீன ஆதரவு மாணவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயற்சி செய்கின்றனர். அச்சமயம் அக்கல்லூரியின் பேராசிரியர் கரோலின் ஃபோலின் என்பவர் காவல்துறையினரிடம், “இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என்கிறார்.

ஆனால், காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கரோலின் ஃபோலினை மடக்கி தரையில் அழுத்தி அவரை கைது செய்கிறார். அச்சமயம் கரோலின் ஃபோலின் காவலரிடம், “நான் பேராசிரியை ” என்று அவர் திரும்ப திரும்ப கூறியபொழுதும், காவல்துறையினர் அவரை விடுவிக்கவில்லை. இந்த வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.