மேற்கு கடற்கரை பகுதியில் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் நாட்டின் போலீசார் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் யூதர்களை குறிவைத்து பாலஸ்தீன போராட்டக்காரர்கள் கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் யூதர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், இஸ்ரேல் போலீஸார், ராணுவ வீரர்கள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் புனித தலங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ள ஜெருசலேம் பகுதியிலும், வெஸ்ட் பேங்க் பகுதியிலும் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வெஸ்ட் பேங்கில் உள்ள யூதர்கள் வசிக்கும் பகுதியின் சோதனை சாவடியில் பாலஸ்தீன நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் நாட்டின் இரண்டு பாதுகாப்பு படையினர் மற்றும் ஒரு துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு போலீசார் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, பதிலுக்கு இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் யூதர்கள் வசிக்கும் அந்த பகுதியில் பணிபுரிய இஸ்ரேல் அரசின் அனுமதி பெற்றவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. வழக்கமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது.