model image ட்விட்டர்
உலகம்

நேற்று அமெரிக்கா.. இன்று ஐரோப்பா.. காட்டுத்தீயாய் பரவும் மாணவர்களின் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்!

அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் பரவியுள்ளது. 

நிரஞ்சன் குமார்

காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவந்த நிலையில், மாணவர்கள் - கல்வியாளர்கள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடத்தப்பட்டதற்கு எதிராக இஸ்ரேல் ஆதரவு போராட்டக்காரர்களும் களத்தில் இறங்க, அது வன்முறையாகி, பின்னர் காவல்துறை கைது நடவடிக்கை வரை சென்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தச் சூழலில் ஐரோப்பாவிலும் மாணவர்களின் போராட்டம் பரவி உள்ளது. நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் மாணவர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையாமல் தடுக்க மரக்கட்டைகள் - சைக்கிள்கள் போன்றவற்றை வைத்து தடுப்புகளை அமைத்திருந்தனர். அதனை அகற்ற காவல்துறையினர் முயன்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த போராட்டத்தில் 125க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: ’உங்க வீட்டு கலவை மெஷின் சத்தம் தொந்தரவா இருக்கு’ - சச்சினுக்கு எதிரா புகார் சொன்ன நபர்! வைரல்பதிவு!

ஜெர்மனியின் பெர்லின் நகரிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. பெர்லின் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவு செயல்பாட்டாளர்கள் 20க்கும் அதிகமான கூடாரங்களை அமைத்தும் மனித சங்கிலி ஆகவும் நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர். உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என பெர்லின் காவல்துறையினர் ஒலிபெருக்கியின் மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.