இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை, காஸா நகர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் அமெரிக்காவே போர் நிறுத்தம் வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராக, அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் காஸா போரை நிறுத்தக்கோரி பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. இந்தப் போராட்டத்தின் நீட்சியாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.
நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் ஹார்வர்டு, யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் பரவியது.
அப்படி போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்துதல், ஆயுத விநியோகம் மற்றும் போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமெரிக்காவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மாணவர்களின் போராட்டத்தைக் கலைக்கும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது.
இதில் மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. பாலஸ்தீன ஆதரவு மாணவர்களை காவல்துறையினர் கைதுசெய்து வருகின்றனர். இதனால், அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “இது பயங்கரமானது. யூத எதிர்ப்பு கும்பல் முன்னணி பல்கலைக்கழகங்களை கைப்பற்றியுள்ளன. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள யூத எதிர்ப்பானது, 1930களில் ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் நடந்ததை நினைவூட்டுகிறது. இதை பார்த்துக்கொண்டு உலகம் சும்மா இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.