சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்து பழக்கப்பட்ட பறக்கும் கார்களை நிஜ வாழ்வில் கொண்டு வருவது இதுநாள் வரை சவாலான காரியமாகவே இருந்து வருகின்ற நிலையில் சில ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அதனை சாத்தியப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.
அந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது PAL-V என்ற டச்சு கார் கம்பெனி. லிபெர்ட்டி பிளெயிங் கார் என்ற பறக்கும் காரை அந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதோடு ஐரோப்பாவில் இந்த காரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உள்ளது அந்நிறுவனம். அதற்கான சட்டப்பூர்வமான அனுமதியை பெறுவதற்கான முயற்சிகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அதற்கான வெள்ளோட்டத்தை பரிசோதித்து வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
‘பல நாள் முயற்சிக்கு கிடைத்த பலனாகவே இதை பார்க்கிறேன். அணியின் கூட்டு முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது. வான் மற்றும் சாலை போக்குவரத்து தரநிலைகளுக்கு உட்பட்டு இரண்டுக்கும் ஏற்ற வகையில் இதை வடிவமைத்துள்ளோம்’ என சொல்லியுள்ளார் தலைமை தொழில்நுடப் அதிகாரி மைக்.
மூன்று சக்கரங்களில் இயங்கும் இந்த காரில் மடக்கும் வகையிலான இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு பேர் பயணிக்கலாம். சாலையில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆகாயத்தில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்திலும் இதில் பயணிக்கலாம்.
பறக்கும் காராக இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக விமான ஓடு தளத்தை பயன்படுத்தியே இந்த காரை டேக் ஆப் மற்றும் லேண்ட் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.