உலகம்

”மோடியுடன் டிவியில் நேருக்கு நேர் விவாதம் நடத்த ஆசைப்படுகிறேன்” - பாக். பிரதமர் இம்ரான்

”மோடியுடன் டிவியில் நேருக்கு நேர் விவாதம் நடத்த ஆசைப்படுகிறேன்” - பாக். பிரதமர் இம்ரான்

ஜா. ஜாக்சன் சிங்

பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் விவாதம் நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் ரஷ்யாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதை முன்னிட்டு, அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று பேட்டியளித்திருந்தார். அப்போது அவர், "இந்தியா - பாகிஸ்தான் இடையே பல்வேறு விவகாரங்களில் முரண்பாடுகள் உள்ளன. இந்த பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் அதற்கான சூழல் உருவாகவில்லை. இரு நாட்டு உறவு தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேருக்கு நேர் விவாதம் நடத்த மிகவும் ஆசைப்படுகிறேன். ஒருவேளை, அந்த உரையாடலில் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டால், இந்திய துணைக்கண்டத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் பலன் அடைவார்கள்" என இம்ரான் கான் கூறினார்.

எனினும், இம்ரான் கானின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தரப்பில் இருந்தோ, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பிலோ இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.