oil  x page
உலகம்

பாகிஸ்தானின் கடல் பகுதியில் பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.. பொருளாதார நெருக்கடி குறையுமா?

Prakash J

உலக பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று, பெட்ரோலியப் பொருட்கள். அந்தப் பெட்ரோலியத்தை நம்பித்தான் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் இருக்கும் நிலையில், அவ்வளத்தைக் கொண்ட வெனிசுலா, சவூதி அரேபியா, ஈரான், கனடா, ஈராக் ஆகிய நாடுகள் வளம் கொழிக்கும் நாடுகளாக உள்ளன.

இந்த நிலையில், பாகிஸ்தானின் கடல் பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் குறிப்பிடத்தக்க இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தவிர அப்பகுதியில் பல மதிப்புமிக்க கனிம வளங்களும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dawn News TV என்ற பாகிஸ்தான் ஊடகம், நட்பு நாடுடன் இணைந்து 3 ஆண்டுகள் நிலப்பரப்புகளை ஆராய்ந்து இந்த எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதாகக் கூறியுள்ளது. இதன்மூலம் உலகளவில் நான்காவது பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பாக இருக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, ஆய்வு மற்றும் ஏலத்திற்கான பேச்சுவார்த்தைகள் மதிப்பாய்வில் உள்ளன. என்றாலும், கிணறுகளை அமைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பது ஒரு நீண்டகாலம் ஆகலாம் எனவும், இந்த திட்டங்களைச் செயல்படுத்த அதிகளவிலான முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்| ”அவர்கள் ஆபத்து நிறைந்தவர்கள்”-ட்ரம்ப், கமலா ஹாரிஸ் நேரடியாக காரசார விவாதம்

இதுதொடர்பாக பாகிஸ்தான் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையத்தின் (OGRA) முன்னாள் உறுப்பினர் முஹம்மது ஆரிஃப், ”இந்த கண்டுபிடுப்பு நாட்டிற்கு நம்பிக்கையை தருவதாக இருந்தாலும், வளங்களின் இருப்புகள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமலும் போகலாம். மேற்படியான ஆய்வுக்கு சுமார் டாலர் 5 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் தேவைப்படலாம். எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுப்பதற்கு சுமார் 5 ஆண்டுகள்வரை ஆகலாம். இருப்பினும், வளங்களின் இருப்புகள் சரியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஆய்வு தொடங்கும்வரை, தற்போதைய எதிர்பார்ப்புகள் பெருமளவில் ஊகமாகவே இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவரும் பாகிஸ்தானுக்கு, இந்த எண்ணெய் வள கண்டுபிடிப்பு நம்பிக்கையைத் தரும் பட்சத்தில், அது வருங்காலத்தில் பல தரப்பில் பொருளாதாரத்தை உயர்த்த உதவக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: கடும் வீழ்ச்சியைச் சந்தித்த கச்சா எண்ணெய்.. பின்னணி காரணம் என்ன? குறையுமா பெட்ரோல், டீசல் விலை?