பாகிஸ்தான் நாட்டில் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை, முறைகேடான உறவில் ஈடுபட்டதாக கூறி கல்லால் அடித்து கொலை செய்ய கிராமப் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் மத அடிப்படைவாதம் நிறைந்த ராஜன்புர் கிராமத்தில் பெண்களுக்கான பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 19 வயது இளம்பெண் ஒருவர் தனது உறவினருடன் முறைகேடான உறவில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு மரண தண்டனை (கல்லால் அடித்து கொல்லுதல்) விதித்து அந்த கிராமப் பஞ்சாயத்து உத்தரவிட்டது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அந்த பெண் தூங்கும் சமயத்தில் வீட்டிற்குள் நுழைந்த உறவுக்கார இளைஞன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளான். நடந்த உண்மையை அந்த பெண் பஞ்சாயத்தில் கூறியும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, அந்த கிராமத்தை விட்டு தப்பி ஓடிய அந்த பெண் போலீசில் சென்று புகாரளித்தார். புகாரின் பேரில் கிராமப் பஞ்சாயத்துக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாதுகாப்பான அரசு விடுதியில் அந்த பெண்ணை தங்க வைத்துள்ளனர்.